கல்வி அமைச்சர் உள்ளிட்டோருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் அறிவித்தல் பிறப்பிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 27, 2021

கல்வி அமைச்சர் உள்ளிட்டோருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் அறிவித்தல் பிறப்பிப்பு

கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் உள்ளிட்ட சிலரை எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (27) அறிவித்தல் பிறப்பித்துள்ளது.

மாவட்ட கோட்டா முறைமை மற்றும் புதிய மற்றும் பழைய பரிந்துரைகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்படும் வகைப்படுத்தல்களுக்கு அமைய பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிக்க அதிகாரிகள் எடுத்துள்ள தீர்மானத்தை அமுல்படுத்துவதை தடுக்கும் எழுத்தாணையை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பில் விடயங்களை முன்வைப்பதற்காக இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அம்பலங்கொடயை சேர்ந்த மாணவி ஒருவரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட சந்தர்ப்பத்தில் மனுதாரர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக்க கனேபொல உள்ளிட்ட நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித்த உள்ளிட்டவர்களுக்கு அறிவித்தல் பிறப்பிக்குமாறு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில் கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் தோற்றி, மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெற எதிர்பார்த்திருந்த தமக்கு, புதிய முறைமை காரணமாக அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி தினேஷ் சில்வாவினூடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த முறைகளினூடாக பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதை தடுக்கும் தடையீட்டு எழுத்தாணையை பிறப்பிக்குமாறு பல்கலைக்கழ மற்றும் உயர் கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்காக புதிய முறைமையை உருவாக்குமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறு மனுதாரர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோன்று தம்மை எந்த பல்கலைக்கழகத்திலாவது மருத்துவ பீடத்திற்கு அனுமதிக்குமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறும் மனுதாரர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment