ஹரீனுக்கு ஏதாவது நடந்தால் ஜனாதிபதியும், அரசாங்கமுமே பொறுப்பு - ரஞ்சனின் பாராளுமன்ற உறுப்புரிமை பாதுகாக்கப்படும் : சுதந்திர சதுக்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 13, 2021

ஹரீனுக்கு ஏதாவது நடந்தால் ஜனாதிபதியும், அரசாங்கமுமே பொறுப்பு - ரஞ்சனின் பாராளுமன்ற உறுப்புரிமை பாதுகாக்கப்படும் : சுதந்திர சதுக்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம்

(எம்.மனோசித்ரா)

பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ மீது ஏதேனுமொரு வகையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டாலும் அதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும் அவர் தலைமையிலான அரசாங்கமுமே பொறுப்பேற்க வேண்டும். ஹரீனுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்தும் முன்னிற்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மேலும் அரசியலமைப்பிற்கமையவும் சட்ட ரீதியாகவும் ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையை பாதுகாப்பதற்கான முயற்சியை தொடர்ந்தும் முன்னெடுப்போம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஹரின் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டிருந்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 'பேச்சு சுதந்திரத்தை பாதுகாப்போம்' என்ற தொனிப்பொருளில் இன்று புதன்கிழமை கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்க வளாகத்தில் ஐக்கிய மக்கள் சக்தி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தது.

இதன் போது மேற்கண்வாறு கூறிய எதிர்க்கட்சித் தலைவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இலங்கை சுதந்திரமானதும் ஜனநாயக ரீதியானதுமாகும். நாட்டில் ஜனநாயகம் நடைமுறையிலுள்ளதே தவிர சர்வாதிகாரமல்ல. பேச்சு சுதந்திரம் உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் மக்களுக்கு இருக்கிறது. 

மக்களுக்கு உள்ள உரிமைகளுக்கு சமமான உரிமை மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இருக்கிறது. அதனை பாராளுமன்றத்திலும் பாராளுமன்றத்திற்கு வெளியிலும் உபயோகிக்க வேண்டும்.

அதனை உபயோகித்தே பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ நாட்டு மக்கள் சார்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அதற்காக அவரது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றமையை ஏற்றுக் கொள்ள முடியாது. 

ஹரின் மீது ஏதேனும் மிலேச்சத்தனமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுமாயின் அதனை எம் ஒவ்வொருவர் மீதும் தனிப்பட்ட ரீதியில் மேற்கொள்ளப்படும் தாக்குதலாகவே கருதுவோம்.

அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்த நாம் அவருடன் இருப்போம். ஏதேனுமொரு வகையில் அவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால் அதற்கு ஜனாதிபதியும் அவர் தலைமையிலான அரசாங்கமும் பொறுப்பு கூறு வேண்டும். 

ஆளுந்தரப்பில் சிலர் இதனை கேலிக்குள்ளாக்குகின்றனர். அவர்களது பாதுகாப்பு உறுதியாகவுள்ளதால் எதிர்த்தரப்பினர் பாதிக்கப்படுவதை கேலிக்குட்படுத்த வேண்டாம் என்று வலியுறுத்துகின்றோம். ஜனநாயக நாட்டில் காணப்படும் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.

இதேவேளை தற்போது சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் கவலையடைகின்றோம். எனினும் இதற்கு முன்னரும் அவர் பல சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளார். அவற்றின் போது நானும் ஐக்கிய மக்கள் சக்தியினரும் அவருடன் இருந்ததைப் போலவே இனியும் நாம் அவருடனேயே இருப்போம். 

நீதிமன்றத்தின் தீர்ப்பை நாம் ஒருபோதும் சவாலுக்கு உட்படுத்தப்போவதில்லை. எனினும் சட்ட ரீதியாக முன்னெடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகளை நிச்சயம் முன்னெடுப்போம். அவருக்காக முன்னின்று நியாயத்தைப் பெற்றுக் கொடுப்போம். 

அரசியலமைப்பிற்கமையவும் சட்ட ரீதியாகவும் அவரது பாராளுமன்ற உறுப்புரிமையை பாதுகாப்பதற்கான முயற்சியை தொடர்ந்தும் முன்னெடுப்போம். ரஞ்சன் ராமநாயக்கவை நாம் ஒருபோதும் தனித்து விடப்போவதில்லை என்றார்.

No comments:

Post a Comment