"சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தினை கட்டியெழுப்ப வேண்டுமாயின் சகல மக்களின் உணர்வுகள் மதிக்கப்படவும் அவர்களின் மத, கலாச்சார, பண்பாட்டு உரிமைகள் பாதுகாக்கப்படவும் வேண்டும்" - நல்லாட்சிக்கான தேசிய முன்னணி - News View

Breaking

Post Top Ad

Sunday, January 10, 2021

"சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தினை கட்டியெழுப்ப வேண்டுமாயின் சகல மக்களின் உணர்வுகள் மதிக்கப்படவும் அவர்களின் மத, கலாச்சார, பண்பாட்டு உரிமைகள் பாதுகாக்கப்படவும் வேண்டும்" - நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியானது, நேற்று முன்தினம் இரவோடிரவாக தகர்க்கப்பட்டமையானது, தற்பொழுது பெரும் பேசுபொருள் ஆகியுள்ளது. மட்டுமல்லாது இது பலரின் கண்டனங்களுக்கும் உள்ளாகியுள்ளது. இது குறித்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது "கடந்த முப்பது வருட கால யுத்தத்திற்குப் பின்னர் எமது நாடு பல்வேறு பின்னடைவுகளையும் சவால்களையும் எதிர்நோக்கியிருந்தது. சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தினை கட்டியெழுப்புதல், இனங்களுக்கிடையிலான மீள் இணக்கப்பாடு, பாதிக்கப்பட்ட மக்களினை உள ஆற்றுப்படுத்தல் என்பன நிலையான சமூக நல்லிணக்கத்துக்கு அவசியமான அடிப்படை அம்சங்களாகும். 

அதற்கான ஆரம்ப வேலைத்திட்டங்கள் சில முன்னெடுக்கப்பட்ட போதிலும் அவை பூரணப்படுத்தப்படாத நிலையிலேயே கடந்த ஜனாதிபதித் தேர்தலினை நாம் எதிர்கொண்டோம். ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் தாம் விரும்பும் தெரிவுகளுக்கு மக்கள் வாக்களித்திருந்தனர். 

எனினும் தேர்தலில் வெற்றி பெற்று பதவிக்கு வந்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள், இந்நாட்டிலுள்ள அனைத்து இன மக்களுக்குமான ஜனாதிபதியாகவே பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். தனது பதவிப்பிரமாண உரையிலும் தான் இன, மத வேற்றுமைகளின்றி அனைத்து இனமக்களுக்காகவும் சேவையாற்ற உள்ளதாகவுமே வாக்களித்திருந்தார்.

ஆனால் இன்று நாடு கொவிட்19 எனப்படும் மற்றுமொரு பாரிய சவாலுக்கு முகம் கொடுத்து வருகின்ற வேளையில், சிறுபான்மை மக்களின் உணர்வுகளை கேள்விக்குட்படுத்துகின்ற வகையில் நடைபெறுகின்ற சம்பவங்களானது, இந்நாட்டினது எதிர்காலம் குறித்த அச்சத்தினை அனைவர் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது.

இனமுரண்பாடுகளினாலும் உள்நாட்டு யுத்தத்தினாலும் பாதிக்கப்பட்ட மக்கள் அந்த வடுக்களிலிருந்து வெளிவர வேண்டுமாயின் அவர்களுக்கான முறையான உள ஆற்றுப்படுத்தல்கள் அவஷ்யமாகும். 

அதற்கான வழிகளில் பிரதானமான ஒன்றுதான் அவர்களை விட்டும் பிரிந்த உறவுகளை அவர்கள் நினைவு கூருதல், அவர்களுக்கான இறுதி மதச் சடங்குகளை அவரவர் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் நிறைவேற்றல் மற்றும் இறுதி மரியாதையினை, அஞ்சலியினை செலுத்துதல் போன்றவையாகும். 

இந்தப் பின்னணியிலேயே இவ்வாறான பல நினைவுத் தூபிகள் நாட்டின் பல இடங்களிலும் நிறுவப்பட்டுள்ளன. பல்கலைக்கழக வளாகங்களிலும் கூட இதுபோன்ற நினைவுத் தூபிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கான அஞ்சலிகளும் வருடந்தோரும் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த தூபி மாத்திரம் இரவோடிரவாக அவசரமாக அகற்றப்பட்டிருப்பதானது பல சந்தேகங்களினையும் தோற்றுவித்துள்ளது. மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த செயல் கண்டனத்துக்குரியதாகும்.

நாட்டில் வாழுகின்ற அனைத்து இன மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்காத, அவர்களின் கலாச்சார மத அனுஷ்டானங்களை மறுத்துரைக்கின்ற நடவடிக்கைகள் மூலமாக சமூகங்களுக்கிடையிலான சக வாழ்வினையும் சமூக நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப முடியாது. இது நம் தேசத்தின் எதிர்காலத்துக்கு பெரும் குந்தகமானதாகும்.

எனவே எமது நாட்டினை அபிவிருத்திப்பாதையில் கட்டியெழுப்பவும் இணங்களுக்கிடையிலான நல்லுறவினையும் சமாதானத்தினையும் வளர்த்தெடுக்கவும் அரசாங்கமும் ஜனாதிபதி அவர்களும் சிறுபான்மை சமூகங்களின் உணர்வுகள் பாதுகாக்கப்படுவதினை உறுதிப்படுத்துதல் வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாதவாறு தடுத்து நிறுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad