5 ஜீ தொழிநுட்பத்திற்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை - மன்னார் நகர சபை தலைவர் ஞானப்பிரகாசம் - News View

Breaking

Post Top Ad

Friday, January 8, 2021

5 ஜீ தொழிநுட்பத்திற்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை - மன்னார் நகர சபை தலைவர் ஞானப்பிரகாசம்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக அமைக்கப்பட்ட 5 ஜீ தொழிநுட்பத்திற்கு இதுவரை மன்னார் நகர சபை அனுமதி வழங்கவில்லை என மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்துள்ளார்.

மேலும், 5 ஜீ கோபுரம் மற்றும் மின் குமிழ்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே எஸ்.ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தற்போது வரை மன்னார் நகர சபையினால் எவ்வித தொலைத் தொடர்பு சேவைகளுக்குமான அனுமதியும் வழங்கப்படவில்லை.

மன்னார் நகர சபையினால் சபையின் அனுமதியுடன் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக கோபுரம் மற்றும் மின் குமிழ்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நகரத்தில் இது வரை 4 ஜீ மற்றும் 5 ஜீ தொழிநுட்பத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

தேசிய தொலைத் தொடர்பு ஆணைக்குழுவின் அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர் மாவட்ட சுற்றுச் சூழல் அதிகார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியோரிடம் உரிய அனுமதிகள் பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னரே மன்னார் நகர சபை அனுமதி வழங்குவதா? இல்லையா? என்பது தொடர்பாக பரிசீலிக்கும்.

மேலும் மன்னார் நகர சபையினால் மன்னாரில் 5 ஜீ தொழிநுட்பத்திற்கு எவ்வித அனுமதியும் வழங்கப்படமாட்டாது. கோபுரம் மற்றும் மின் குமிழ் இணைப்பிற்கு மாத்திரமே சபையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

5 ஜீ தொடர்பில் மக்கள் மத்தியில் ஏற்பட்ட வதந்திகளை நம்ப வேண்டாம். மன்னார் நகர சபைக்கு வரும் பட்சத்தில் மக்களின் சந்தேகம் தீர்க்கப்படும். மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற எந்தவித வேலைத்திட்டத்திற்கும் மன்னார் நகர சபையினால் அனுமதி வழங்கப்படாது.

எனவே பலர் 5 ஜீ தொடர்பில் மக்களிடம் வதந்திகளை பரப்பி வருகின்றனர். அதனை நம்ப வேண்டாம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad