மஹபொல நம்பிக்கை நிதியத்தின் கீழ் உள்ள 3 நிறுவனங்களுக்கு கோப் குழு பரிந்துரை - News View

Breaking

Post Top Ad

Wednesday, January 13, 2021

மஹபொல நம்பிக்கை நிதியத்தின் கீழ் உள்ள 3 நிறுவனங்களுக்கு கோப் குழு பரிந்துரை

மஹபொல நம்பிக்கை நிதியத்தின் ஒன்லைன் லொத்தர் சீட்டிழுப்பு மற்றுமொரு இடைத்தரகரால் விற்பனை செய்ததன் காரணமாக அந்த நபரால் ஈட்டிக்கொள்ளப்பட்ட 678 மில்லியன் ரூபா மஹபொல நம்பிக்கை நிதியத்துக்குப் பெற்றுக் கொள்ளப்படவில்லையென அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) புலனாகியுள்ளது.

இது பாரிய மோசடி என்றும், இதுபற்றி சட்டமா அதிபருக்குத் தெரியப்படுத்தி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினூடாக உரிய விசாரணைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத், வர்த்தக அமைச்சின் செயலாளர் ஜே.எம்.பத்ரானி ஜயவர்த்தனவுக்கு பணிப்புரை விடுத்தார்.

கடந்த 08ஆம் திகதி பாராளுமன்றத்தில் கோப் குழு கூடிய சந்தர்ப்பத்திலேயே பேராசிரியர் சரித ஹேரத் இந்தப் பணிப்புரையை வழங்கினார்.

இராஜாங்க அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, கலாநிதி நாளக கொடஹேவா, பாராளுமன்ற உறுப்பினர்களான இரான் விக்ரமரட்ன, நளின் பண்டார ஜயமஹா, பிரேம்நாத். சி. தொலவத்த, எஸ்.எம்.மரிக்கார் உள்ளிட்டவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

அத்துடன், மஹபொல நம்பிக்கை நிதியத்தின் கீழ் செயற்படும் வரையறுக்கப்பட்ட நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட பத்திரங்களின் ஊடாக கொடுக்கல் வாங்கல்களால் 2015/2016 காலப்பகுதியில் 18 மில்லியன் ரூபா மற்றும் 102 மில்லியன் ரூபா நஷ்டமும், 2017ஆம் ஆண்டு நஷனல் வெல்த் கம்பனியின் முதலீட்டைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட மீள்கொள்முதல் பரிவர்த்தனைகளில் 13 மில்லியன் ரூபா நஷ்டமும் ஏற்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டிய கோப் குழு, இந்த முறைகேடுகள் நம்பிக்கை நிதியத்துக்குப் பாரிய நஷ்டத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தது.

இது தொடர்பில் விளக்கமளித்த அதிகாரிகள், இவற்றை நஷ்டத்திலும் செயற்படுத்திச் செல்ல வேண்டியிருப்பதாகவும், இவற்றைக் கலைப்பதற்கு அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றிருப்பதாகவும் தெரிவித்தனர். 

இது பற்றி கருத்துத் தெரிவித்த கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத், உரிய நபர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுக் கொடுத்த பின்னர் அவற்றைக் கலைப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை எனினும், இதுபோன்ற பாரிய முறைகேடுகள் இடம்பெற்றுள்ள நிலையில் எந்த விசாரணைகளும் இன்றி இவற்றைக் கலைப்பது பொருத்தமற்றது என்றார்.

இதற்கமைய மஹாபொல நம்பிக்கை நிதியத்தின் கீழுள்ள நிறுவனங்களாக நெட்வெல்த் கோப்ரேஷன் மற்றும் நஷனல் வெல்த் செக்கியூரிட்டீஸ் கம்பனி ஊடாக மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகள் தொடர்பில் உரிய ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர், இந்த இரண்டு நிறுவனங்களையும் கோப் குழுவின் முன்னிலையில் அழைப்பதற்கும், இந்த முறைகேடுகள் பற்றி உரிய விசாரணைகளை நடத்தும்வரை அவற்றைக் கலைக்கும் நடவடிக்கைகளை காலதாமதப்படுத்தும் படியும் கோப் குழு, அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கியது.

இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவகத்தின் (SLIIT) தற்போதைய நிலைமை குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இந்த நிறுவனம் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தபோதும் அவ்வாறு வருவதற்கு சட்ட ரீதியாக கடமைப்பட்டிருக்கவில்லையென Julius & Creasy நிறுவனத்தின் ஊடாக கோப் குழுவுக்கு அறிவித்திருந்தமை தொடர்பில் கோப் குழு அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது. 

இந்த நிலைமையைத் தெளிவுபடுத்தும் நோக்கில் முதலில் Julius & Creasy நிறுவனத்தை கோப் குழுவுக்கு அழைக்க வேண்டும் என்றும் இங்கு தெரிவிக்கப்பட்டது. இதற்கமைய SLIIT தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் என்றும், அந்நிறுவனம் தொடர்பில் மேலும் கலந்துரையாடல்களை நடத்த உள்ளக அறிக்கையொன்றைத் தயாரித்து பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர் இது தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தீர்மானத்துக்கு வருவது பொருத்தமானது என்றும் கோப் குழு சுட்டிக்காட்டியது.

அத்துடன், உள்ளகக் கணக்காய்வாளர் மற்றும் கணக்காளர் ஆகியோர் நிறுவனத்தில் இல்லையென்பதும் இங்கு புலப்பட்டது. கூடிய விரைவில் இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோப் குழு வலியுறுத்தியது.

மஹாபொல உயர் கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியத்தின் முதலீடுகளை முகாமைத்துவம் செய்வது தொடர்பில் விசேட கணக்காய்வு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டும், இந்நம்பிக்கை நிதியத்தின் செயற்திறன் அறிக்கை மற்றும் கணக்காய்வாளர் நாயகத்தினால் முன்வைக்கப்பட்ட விசேட அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு கோப் குழுவின் முன்னிலையில் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad