இந்தியாவிடமிருந்து 3 பகுதிகளை மீட்போம் - நேபாள பிரதமர் மீண்டும் சர்ச்சை பேச்சு - News View

Breaking

Post Top Ad

Tuesday, January 12, 2021

இந்தியாவிடமிருந்து 3 பகுதிகளை மீட்போம் - நேபாள பிரதமர் மீண்டும் சர்ச்சை பேச்சு

இந்தியாவிடம் இருந்து 3 பகுதிகள் மீட்கப்படும் என்று நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி, மீண்டும் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள காலாபானி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய 3 பகுதிகளை தங்களுக்கு சொந்தமானது என்று நேபாளம் உரிமை கோரி வருகிறது.

இந்த மூன்று பகுதிகளையும் தங்கள் நாட்டுடன் இணைத்து புதிய வரைபடத்தை நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி வெளியிட்டார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனாலும் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை கே.பி. சர்மா ஒலி கூறி வந்தார்.

இதற்கிடையே நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்கு பாராளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி, இந்தியாவிடம் இருந்து 3 பகுதிகள் மீட்கப்படும் என்று மீண்டும் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது மகாகாளி நதிக்கு கிழக்கே உள்ள காலாபானி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய பகுதிகள் சுகவுலி ஒப்பந்தத்தின்படி நேபாளத்துக்கு சொந்தமானது. இந்தியாவுடன் தூதரக ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தி அந்த பகுதிகள் மீட்கப்படும்.

நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் 14ம் திகதி இந்தியா செல்கிறார். அப்போது அவர் 3 பகுதிகளையும் இணைத்து நேபாளம் வெளியிட்ட வரைபடம் குறித்து ஆலோசனை நடத்துவார்.

இறையாண்மை சமத்துவத்தின் அடிப்படையில் இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்த நேபாளம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல் சில விவகாரங்களில் நியாயமான கவலைகளை இந்தியாவிடம் எழுப்ப நேபாளம் தயங்கக்கூடாது இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad