ஸஹ்ரானின் மனைவி உள்ளிட்ட 12 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு - ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் வழக்கை 27 இல் எடுக்குமாறு உத்தரவு - News View

Breaking

Post Top Ad

Wednesday, January 13, 2021

ஸஹ்ரானின் மனைவி உள்ளிட்ட 12 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு - ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் வழக்கை 27 இல் எடுக்குமாறு உத்தரவு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான தற்கொலைக் குண்டுதாரி ஸஹ்ரான் ஹாசிமின் மனைவி உள்ளிட்ட 12 பேருக்கு எதிர்வரும் ஜனவரி 27ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே இன்று (13) இவ்வுத்தரவை வழங்கினார்.

ஸஹ்ரானின் மனைவி அப்துல் ஹமீத் பாத்திமா ஹாதியா, அசாருதீன் மொஹமட் ஹில்மி, அப்துல் ஹமீத் முகமது ரிபாஸ், மொஹமட் மஷ்னுக் மொஹமட் றிழா, மொஹமட் அமீர் எம் ஹயாத்துல்லா, மொஹமட் முபாரக் முகமது ரிபாயில் உள்ளிட்டவர்களும், கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டல் குண்டுவெடிப்புடன் தொடர்புபட்ட மொஹமட் முபாரக் எனும் சந்தேகநபரின் மனைவியான ஆயிஷா சித்திகா, மொஹமட் வசீம் உள்ளிட்ட 12 பேருக்கு இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

ஸ்கைப் தொழில்நுட்பம் மூலம் சந்தேகநபர்கள் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து. நீதவான் குறித்த உத்தரவை பிறப்பித்தார்.

இதேவேளை, சின்னமன் கிராண்ட் ஹோட்டல் குண்டு வெடிப்புடன் தொடர்புடைய குண்டுதாரியுடன் தொடர்பு எனத் தெரிவிக்கப்படும் வழக்கிற்கு அமைய, தடுத்து வைக்கப்பட்டுள்ள ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வையும் ஜனவரி 27ஆம் திகதி எடுத்துக் கொள்ளுமாறு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே இன்று (13) உத்தரவிட்டிருந்தார்.

கடந்த திங்கட்கிழமை (11) சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பான வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அவரை மேலும் மூன்று மாதங்கள் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சு அனுமதியளித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த விடயம் தொடர்பில் கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சுமார் 9 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்பட்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad