மன்னாரில் தொற்றுள்ள வர்த்தகருடன் தொடர்பிலிருந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கை ஆரம்பம், 113 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு - மாவட்ட அரசாங்க அதிபர் - News View

Breaking

Post Top Ad

Tuesday, January 12, 2021

மன்னாரில் தொற்றுள்ள வர்த்தகருடன் தொடர்பிலிருந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கை ஆரம்பம், 113 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு - மாவட்ட அரசாங்க அதிபர்

மன்னார் அரச பஸ் நிலையத்துக்கு முன்பாக உள்ள ஆடை விற்பனை நிலையத்தை நடத்தி வருகின்ற வர்த்தகர் ஒருவருக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவாதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், “மன்னார் புதிய பஸ் தரிப்பிடப் பகுதியில் கடந்த 6 ஆம் திகதி 200 நபர்களுக்கு எழுமாறான பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் இருவருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டது.

தொற்றுக்குள்ளானவர்களில் ஒருவர் இலங்கை அரச போக்கு வரத்து சேவையின் புத்தளம் சாலைக்கான நிக்கவரெட்டிய பகுதியைச் சேர்ந்த நடத்துனர். மற்றைய நபர் கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த மன்னார் அரச பஸ் நிலையத்துக்கு முன்பாக உள்ள ஆடை விற்பனை நிலையத்தை நடத்தி வருகின்ற வர்த்தகர்.

கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த மன்னார் அரச பஸ் நிலையத்துக்கு முன்பாக உள்ள ஆடை விற்பனை நிலையத்தை நடத்தி வருகின்ற வர்த்தகர் மன்னார் உப்புக்குளம் பகுதியில் வசித்து வந்ததால் அவருடன் தொடர்புடைய நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

உப்புக்குளம் கிராமத்தை அண்மித்த மன்னார் அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலை மற்றும் மன்னார் சித்தி விநாயகர் இந்து தேசிய பாடசாலை ஆகிய இரு பாடசாலைகளும் நேற்று திங்கட்கிழமை மூடப்பட்ட போதும் இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் வழமை போல் இயங்கும்.

ஏற்கனவே மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்தில் 5 நபர்கள் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களுடன் தொடர்புடைய 113 பேர் அடையாளம் காணப்பட்டு சுய தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் அடுத்த வாரம் அளவில் விடுவிக்கப்படுவார்கள்.

தனிமைப்படுத்தப்பட்ட 113 நபர்களில் 70 மாணவர்களும் உள்ளனர். அவர்களும் அடுத்த வாரம் பாடசாலை செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

ஆடை விற்பனை நிலையத்துக்குச் சென்ற, அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக பொதுச் சுகாதார பரிசோதகர்களுடன் தொடர்புகொண்டு தங்களை உடனடியாக பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.

குறித்த ஆடை விற்பனை நிலையத்தை நடத்தி வருகின்றவர் எங்களுக்கு குறிப்பாக சுகாதாரத் துறையினருக்கு வழங்கிய பூரண ஒத்துழைப்பின் காரணமாக அவரை அடையாளம் கண்டு அவருடன் தொடர்பில் உள்ளவர்களை பாதுகாப்பதற்கு உதவியாக அமைந்துள்ளது. எனவே அச்சம் கொள்ளாது பி.சி.ஆர். பரிசோதனைக்கு ஒத்துழையுங்கள்” என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad