வாகன எண் தகடுகளில் மாகாணங்களை குறிக்கும் எழுத்துக்கள் அகற்றம் - அமைச்சரவை அங்கீகாரம் - News View

Breaking

Post Top Ad

Monday, December 14, 2020

வாகன எண் தகடுகளில் மாகாணங்களை குறிக்கும் எழுத்துக்கள் அகற்றம் - அமைச்சரவை அங்கீகாரம்

வாகனங்களைப் பதிவு செய்யும் போது வழங்கப்படும் வாகன இலக்கத் தகடுகளில் மாகாணத்தை இனங்கண்டு கொள்வதற்கான குறியீட்டு எழுத்துக்களை நீக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (14) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வாகனங்களைப் பதிவு செய்யும் போது வாகன இலக்கத் தகடுகள் மூலம் மாகாணத்தை இனங்கண்டு கொள்வதற்கான குறியீட்டு எழுத்துகள் சேர்க்கப்பட்டுள்ளதுடன், அதனால் புகைப்பரிசோதனை மற்றும் வருடாந்த வருமானவரிப் பத்திரம் வழங்குவதற்கு இலகுவாக அமைந்துள்ளது.

ஆயினும் வாகன உரிமத்தை மாற்றும் ஒவ்வொரு தடவையும் மாகாண வேறுபாட்டிற்கு அமைய, வாகன இலக்கத்தகட்டை மாற்ற வேண்டியுள்ளதால், சேவை பெறுநரும் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களமும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாக, சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்யும் போது ஒவ்வொரு வாகனத்திற்கும் தனித்துவமான வாகன இலக்கம் வழங்கப்படுவதால், திணைக்களத்தின் தரவுக் களஞ்சியத்தின் மூலம் சரியான வகையில் தனித்துவத்தை அடையாளங் காணக்கூடிய வசதிகள் உண்டு. 

குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு, வாகன இலக்கத் தகடுகள் வழங்கும் போது மாகாணக் குறியீட்டு எழுத்துக்களை நீக்குவதற்காக போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad