அமெரிக்காவில் கொரோனா மேலும் தீவிரமடையும் - மூத்த மருத்துவ விஞ்ஞானி எச்சரிக்கை - News View

Breaking

Post Top Ad

Tuesday, December 29, 2020

அமெரிக்காவில் கொரோனா மேலும் தீவிரமடையும் - மூத்த மருத்துவ விஞ்ஞானி எச்சரிக்கை

கிறிஸ்துமஸ் விடுமுறை கொண்டாட்டங்களால் அமெரிக்காவில் கொரோனா பரவல் மேலும் தீவிரமடையும் என மூத்த மருத்துவ விஞ்ஞானி டாக்டர் அந்தோணி பாசி எச்சரித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பில் உலக அளவில் முதலிடத்தில் உள்ள நாடு அமெரிக்கா. அந்நாட்டில் 1 கோடியே 90 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு 3 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் கொரோனா பரவல் வேகம் தீவிரமடைந்து வருகிறது. தினமும் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் பேர் வரை புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. தினமும் சராசரியாக 3 பேர் உயிரிழக்கின்றனர்.

தற்போது கிறிஸ்துமஸ் விடுமுறை தின கொண்டாட்டங்கள் காரணமாக அந்நாட்டில் சுற்றுலாத்தளங்கள், உணவகங்கள் என பல இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. மக்கள் தங்கள் குடும்பத்தினரை சந்திக்க ஒரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் மேற்கொண்டவாறு உள்ளனர்.

இந்நிலையில், கிறிஸ்துமஸ் விடுமுறை கொண்டாட்டங்களால் அமெரிக்காவில் கொரோனா வைரசின் தாக்கம் மேலும் தீவிரமடையும் என மூத்த மருத்துவ விஞ்ஞானியும், ஒவ்வாமை, தொற்று நோய்கள் நிறுவனத்தின் இயக்குனரும், கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்குழு உறுப்பினருமான டாக்டர் அந்தோணி பாசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் அடுத்த சில வாரங்களில் கொரோனா வைரசின் தாக்கம் மேலும் தீவிரமடையும், இது தொடர்பான எனது கவலைகளை ஜனாதிபதி தேர்தல் வெற்றியாளர் ஜோ பைடனிடம் தெரிவித்துள்ளேன் என டாக்டர் அந்தோணி பாசி தெரிவித்துள்ளார்.

பைசர், மொடர்னா நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிகள் ஏற்கனவே அமெரிக்காவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad