கால்நடைகளை தடை செய்து வாழ்வாதாரத்தை நாசமாக்க இடமளிக்க முடியாது - சார்ள்ஸ் நிர்மலநாதன் - News View

About Us

About Us

Breaking

Monday, December 7, 2020

கால்நடைகளை தடை செய்து வாழ்வாதாரத்தை நாசமாக்க இடமளிக்க முடியாது - சார்ள்ஸ் நிர்மலநாதன்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 

வட மாகாணத்தை பொறுத்த வரையில் கால்நடை பண்ணையாளர்கள் அதிகமாக உள்ளனர். அவ்வாறு இருக்கையில் கால்நடைகளை தடை செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்க இடமளிக்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் தெரிவித்தார். 

சுற்றாடல், வனசீவராசிகள் பாதுகாப்பு, யானை வேலி மற்றும் அகழிகளை அமைத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் மற்றும் காடுகளை மீண்டும் வளர்த்தல் அமைச்சுக்கள் மற்றும் வன வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு மீதான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், எமது பகுதிகளில் மணல் அகழ்வு ஒரு மாபியா போன்றே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது, வன இலாகா திணைக்களம் எமது பகுதிகளில் 44 வீதத்தை தன் வசப்படுத்தியுள்ளது, இதனால் எமது மக்கள் விவசாயம் செய்ய முடியாத நிலைமை உருவாகியுள்ளது. எனவே இதனை கருத்தில் கொண்டு எமது மக்களின் நிலங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

வன ஜீவராசிகள் திணைக்களத்தின் செயற்பாடுகளும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. செட்டிக்குளம் பிரதேச செயலககத்தில் 95 வீதமான மக்கள் விவசாயத்தை நம்பியுள்ளனர். எனினும் அண்மைக் காலமாக குரங்கு, யானை அட்டகாசங்கள் மிக மோசமானதாக உள்ளது. விவசாயிகள் தமது விவசாயத்தை கைவிட்டு வேறு இடங்களுக்கு செல்லும் நிலைமை உருவாகியுள்ளது. இது குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும். எனவே இதற்கான வேலைத்திட்டங்களை 2021 ஆம் ஆண்டில் முன்னெடுக்க வேண்டும்.

வட மாகாணத்தை பொறுத்த வரையில் கால்நடை பண்ணையாளர்கள் அதிகமாக உள்ளனர். பண்ணையாளர்கள் பலர் தமது வாழ்வாதாரத்தை கால்நடையாக வைத்துள்ளனர். அவ்வாறு இருக்கையில் அதனை தடை செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்க இடமளிக்க முடியாது. 

எனவே அவர்களின் வாழ்வாதாரதிற்கான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் முன்னெடுக்கும் ஆலோசனைகளை தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment