தொழில்நுட்ப குழுவை யார் நியமித்தனர்?, அதிலுள்ள அதிகாரிகள் யார்?, வைரஸ் தொடர்பிலான நிபுணர்கள் குழுவில் உள்ளனரா? குழு எந்ததெந்த சந்தர்ப்பத்தில் கூடியுள்ளது? - முஜிபுர் ரஹ்மான் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 1, 2020

தொழில்நுட்ப குழுவை யார் நியமித்தனர்?, அதிலுள்ள அதிகாரிகள் யார்?, வைரஸ் தொடர்பிலான நிபுணர்கள் குழுவில் உள்ளனரா? குழு எந்ததெந்த சந்தர்ப்பத்தில் கூடியுள்ளது? - முஜிபுர் ரஹ்மான்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை அடக்கம் செய்யும் விவகாரத்தை கட்டுக்கதைகள் மூலம் அரசியல் மயப்படுத்தியுள்ளனர். இந்த விடயம் நாட்டில் இன வேறுபாடுகளை உருவாக்கும் ஆபத்து இருக்கின்றது என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ஆரம்பத்தில் பேலியகொட கொத்தணி தொடர்பில் பேசியிருந்தோம். பின்னர் கம்பஹா, மினுவாங்கொடை என கொத்தணிகள் தொடர்பில் தொடர்ந்து பேசி வருகிறோம். 

தற்போது கொத்தணிகளுக்கு அப்பால் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து பிரதேசங்களிலும் நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டு வருகின்றனர். கொவிட் தொற்று சமூகப் பரவல் அடைந்துள்ளதா இல்லையா என்பதை சுகாதார அமைச்சர்தான் விளக்கமளிக்க வேண்டும்.

நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் நிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அனைத்து வைத்தியசாலைகளிலும் கொவிட் தொற்றாளர்கள் அடையாளங்காணப்படுகின்றனர். கண்டி அரச மாளிகையும் தனிமைப்படுத்தல் நிலையமாக மாறியுள்ளதா எனத் தெரியவில்லை. கண்டி மக்கள் இதனால் குழப்பமடைந்துள்ளனர்.

கொவிட் தொற்றுக்குள்ளாகி 116 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். எமது நாட்டின் கலாச்சாரத்தின் பிரகாரம் சடலங்களை அடக்கம் செய்யும் மற்றும் எரிக்கும் மக்கள் குழுக்கள் உள்ளன. பௌத்த மக்கள் மத்தியிலும் சடலங்களை அடக்கம் செய்பவர்களும் எரிப்பவர்களும் உள்ளனர். 

கிறிஸ்தவ மக்களும் பைபிலில் கூறப்பட்டுள்ளதன் பிரகாரம் சடலங்களை அடக்கம் செய்வதுதான் வழமை. இஸ்லாமியர்களும் ஏனைய மதத்தினரும் சடலங்களை அடக்கம் செய்வதற்கான உரிமையை கோரியுள்ளனர். 

உலக சுகாதார ஸ்தாபனம் கடந்த மார்ச் மாதம் 24ஆம் திகதி சுகாதார வழிகாட்டல்களை வழங்கியிருந்தது. அதன் பிரகாரம் சடலங்களை அடக்கம் செய்வதா அல்லது எரிப்பதா என்பதை உறவினர்கள் தீர்மானிக்கலாமென கூறியிருந்தது.

செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி மீண்டும் அதனை உலக சுகாதார ஸ்தாபனம் உறுதி செய்தது. உலகில் 194 நாடுகளில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், எமது நாட்டில் மாத்திரம் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்படுகிறது. தொழில்நுட்ப அனுமதி வழங்கவில்லை என்றே ஒவ்வொரு முறையும் தெரிவிக்கின்றனர்.

அதனால் தொழில்நுட்ப குழுவை யார் நியமித்ததென சுகாதார அமைச்சர் கூற வேண்டும். தொழில்நுட்ப குழுவில் உள்ள அதிகாரிகள் யார் என்பதை அறிவிக்க வேண்டும். வைரஸ் தொடர்பிலான நிபுணர்கள் குழுவில் உள்ளனரா? குழு எந்ததெந்த சந்தர்ப்பத்தில் கூடியுள்ளது. இவை எதனையும் கடந்த 9 மாத காலப்பகுதியில் அரசாங்கம் வெளியிடவில்லை.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் இந்த விடயத்தை கண்டித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களுக்கு அமைய சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட வேண்டுமென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அரசியல் சிக்கல்தான் இங்குள்ளது. ஐ.டி.எச். வைத்தியாலையிலிருந்து வெளியேறும் நீர் எங்கு செல்கிறதென எமக்கு தெரியும். தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருப்பவர்களின் சிறுநீர் மற்றும் கழிவுகள் எங்கு செல்கிறதென எமக்குத் தெரியும். இவை சாதாரண நீருடன் கலந்துதான் செல்கிறன்றன. ஆனால், சடலங்களின் நீர் வெளியேறினால், கொவிட் பரவும் என்கின்றனர். 

அனைத்தும் கட்டுக் கதைகளாகும். கட்டுக் கதைகளை அரசியல் மயப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் இன வேறுபாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதனால் அடிப்படைவாதிகளின் தீர்மானங்களுக்கு அடிபணியாது சாதாரண தீர்மானமொன்றை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றார்.

1 comment:

  1. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரலாம்.

    ReplyDelete