சிக்கலான பகுதிகளில் ஊரடங்கை அமுல்படுத்தாவிட்டால் பரவல் எந்தளவிற்கு தீவிரமடையும் என கூற முடியாது - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Sunday, December 6, 2020

சிக்கலான பகுதிகளில் ஊரடங்கை அமுல்படுத்தாவிட்டால் பரவல் எந்தளவிற்கு தீவிரமடையும் என கூற முடியாது - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

(எம்.மனோசித்ரா) 

அட்டலுகமவைப் போன்று வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள பகுதிகளிலும் மக்களின் ஒத்துழைப்பு குறைவாகக் காணப்படுகின்ற பகுதிகளிலும் தனிமைப்படுத்தல் என்பதைத் தாண்டி குறுகிய காலத்திற்கு பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

அத்தோடு முழு நாட்டிலுமுள்ள மொத்த தொற்றாளர்களில் 30 வீதத்திற்கு அதிகமானோர் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ளனர். இதிலிருந்து இங்கு பாரிய அவதானம் காணப்படுவதாகவும் அந்த சங்கம் எச்சரித்துள்ளது. 

கொழும்பில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இதனை வலியுறுத்தினார். 

அவர் மேலும் கூறுகையில், ஆரம்பத்தில் அபாயமற்ற பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்ட மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களில் கூட தற்போது தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். 

கிழக்கில் சம்மாந்துறை மற்றும் அக்கரைப்பற்று, புத்தளத்தில் சில பகுதிகள், இரத்தினபுரி, மத்திய மாகாணத்தில் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் தொற்றாளர்கள் இனங்காணப்படுவார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. 

முழு நாட்டிலுமுள்ள மொத்த தொற்றாளர்களில் 30 வீதத்திற்கு அதிகமானோர் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ளனர். இதிலிருந்து இங்கு பாரிய அவதானம் காணப்படுகிறது என்பது தெளிவாகிறது. 

இவ்வாறு கொழும்பில் காணப்படுகின்ற அபாயத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கும் அதேவேளை, புதிதாக பண்டாரகம - அட்டலுகம பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பரவலைக் கட்டுப்படுத்துவதுமாகும். 

அவ்வாறு செய்தால் மாத்திரமே தொற்றாளர்கள் குறித்து பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் பிரதேச மருத்துவ அதிகாரிகளுக்கு முறையான தீர்மானங்களை எடுக்க முடியும். அவ்வாறில்லை என்றால் பரவல் எந்தளவிற்கு தீவிரமடையும் என கூற முடியாது என்றார்.

No comments:

Post a Comment