மாவீரர் அனுஷ்டிப்பு கோரிக்கை மனு தள்ளுபடி : பொது இடங்களில் கூட்டாக அனுஷ்டிப்பது பாதுகாப்புக்கு தடை : சட்டத்தரணிகளாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, எம்.ஏ. சுமந்திரன் ஆஜர் - News View

About Us

About Us

Breaking

Friday, November 20, 2020

மாவீரர் அனுஷ்டிப்பு கோரிக்கை மனு தள்ளுபடி : பொது இடங்களில் கூட்டாக அனுஷ்டிப்பது பாதுகாப்புக்கு தடை : சட்டத்தரணிகளாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, எம்.ஏ. சுமந்திரன் ஆஜர்

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றினால், மாவீரர் தின நிகழ்வுகள் நடத்துவதற்கான மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுக்கக் கூடாது என கோரி யாழ். மேல் நீதிமன்றினால், வட மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் மற்றும் வட மாகாண சுகாதார பணிப்பாளருக்கு எதிராக மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு மீதான விசாரணை இன்று (20) யாழ். மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையில், சட்டத்தரணியாக ஆஜராகி தனது சமர்ப்பணத்தை முன்வைத்ததன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரித்த, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, நீதிமன்றினால் வழங்கப்பட்ட தீர்ப்பானது, மக்கள் ஓன்றாக வாழ்வதற்குரிய தீர்வு இன்று இந்த நீதிமன்றினால் கிடைக்கப் பெற்றுள்ளது.

இன்று 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. வட மாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபருக்கும், வட மாகாண சுகாதார பணிப்பாளருக்கும் எதிராக, 25, 26, 27 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்துவதற்கு எந்தவித பாதகமும் விளைவிக்க கூடாது என்று இந்த மனு யாழ். மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை விசாரணை செய்வதற்குரிய அதிகாரம் இந்த நீதிமன்றத்திற்கு இல்லை. அதனடிப்படையில் இந்த நீதிமன்றினால், இந்த 4 மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

எமது நாட்டிற்காக நல்லதொரு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் வாழும், இந்து, கிறிஸ்தவ ,பௌத்த, இஸ்லாம் மக்கள் அனைவரும், ஒற்றுமையுடன், சமாதானத்துடன் வாழ வேண்டும்.

பயங்கரவாதத்தினரின் நினைவு தினத்தைக் கொண்டாடுவதாக இருந்தால், இந்த நாட்டில் சமாதானம் இல்லாமல் போய்விடும். எனவே, இந்த நாட்டில், தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒன்றாக வாழ்வதற்குரிய தீர்ப்பாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது என்றார்.

வழக்கு விசாரணையின் பின்னர், சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், உயிரழந்த உறவுகளுக்கு தனியாக அஞ்சலி செலுத்த முடியும், கூட்டாக அஞ்சலி செலுத்துவது தேசிய பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட விடயமாக இருப்பதனால், நீதிமன்ற நியாயாதிக்கத்திற்கு இல்லை என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அந்த உத்தரவை அவர் படிக்கின்ற போது மனுதாரர்கள் தனியாக தங்களுடைய உறவினர்களுக்கு நினைவேந்தல் செய்வதை எவரும் தடுக்க முடியாது என்பதை ஏற்றுக் கொள்வதாகவும், ஆனால் கூட்டாக சேர்ந்து, மாவீரர் நினைவேந்தல் என்ற அடிப்படையில், அது செய்யப்படுவது, தேசிய பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட விடயமாக இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

ஆகையினால், மனுதாரர்கள் தனியாக தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தலாம் என்றும் கூட்டாக பொது இடத்தில் சேர்ந்து நின்று அஞ்சலி செலுத்துவது தேசிய பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட விடயம் என்ற படியினால் அதனை விசாரிப்பது இந்த நீதிமன்றத்திற்கு நியாயாதிக்கம் இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக சுமந்திரன் தெரிவித்தார்.

உயிரிழந்த எங்கள் பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்தி விளக்கேற்றுவதனை எவரும் தடை செய்யக் கூடாது என பண்டிதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரனின் தாயாரும், மனுதாரருமான சின்னத்துரை மகேஸ்வரி கேட்டுக் கொண்டுள்ளார்.

மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடை செய்ய முயற்சிக்கக் கூடாது என கட்டளை வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட தலையீட்டு நீதிப் பேராணை மனு யாழ். மேல் நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்ட பின்னர், அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவ்வாறு தெரிவித்தார். 

எனது மகன் இறந்து 30 வருடங்கள் கடந்து விட்டன, ஒவ்வொரு வருடமும், மகனுக்காக மாவீரர் நாளுக்கு விளக்கேற்றுகிறேன். துயிலும் இல்லத்திற்கு சென்று மகனுக்கு அஞ்சலி செலுத்தி விளக்கேற்றுவேன்.

இம்முறை மகனுக்கு விளக்கேற்றுவதனை தடை செய்யக்கூடாது என்றே நீதிமன்றை நாடினேன். நீதிமன்றம் மனுவினை தள்ளுபடி செய்துள்ளது.

ஆனாலும் ஆட்கள் சேர்க்காது அஞ்சலி செலுத்த முடியும் என குறிப்பிட்டுள்ளது. எனவே நான் வீட்டில் மகனக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவேன். அதனை யாரும் தடை செய்யக்கூடாது என மன்றாட்டமாக கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

இவரது மகனான வல்வெட்டித்துறை கம்பர் மலை பகுதியை சேர்ந்த, பண்டிதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரன் 1985ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி போரினால் உயிரிழந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ். மேல் நீதிமன்றின் இன்றைய கட்டளை மூலம் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்படவில்லை என மனுதாரர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகளில் ஒருவரான சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், எம்மால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைக்காக அரச சட்டத்தரணிகளின் விசேட அணி ஒன்று கொழும்பில் இருந்து வந்து முன்னிலையாகி இருந்தனர்.

எங்களுடைய விண்ணப்பம் தொடர்பில் அவர்கள் பூர்வாங்க ஆட்சேபனையை தெரிவித்தனர். அதாவது வட மாகாண மேல் நீதிமன்றில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மன்றுக்கு நியாயாதிக்கம் இல்லை என்று.

இந்த வழக்கானது தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்டது எனவும், இவ்வாறான வழக்குகளை கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றிலையே தாக்கல் செய்ய முடியும் என கூறி இந்த வழக்கினை இந்த நீதிமன்றில் எடுத்துக் கொள்ள முடியாது என அவர்களால் தெரிவிக்கப்பட்ட பூர்வாங்க ஆட்சேபனையின் அடிப்படையிலையே இந்த வழக்கு விளங்கப்பட்டது. அது தொடர்பில் மாத்திரமே மன்றினால் கட்டளை ஆக்கப்பட்டு இருந்தது.

அந்த கட்டளையில் மன்று தெரிவித்திருப்பது, இந்த வழக்கின் விடய பொருள் தேசிய பாதுகாப்புடன் தொடர்பு உடையது என்பதனால் தமக்கு அதிகாரம் இல்லை என சொல்லியிருக்கிறது. அதனை தவிர வேறு எந்த விடயமும் கட்டளையாக்கப்படவில்லை.

சிலர் கருத கூடும் இந்த கட்டளையானது நினைவேந்தலுக்கு தடையாக உள்ளது என அவ்வாறு எந்த தடையையும் மேல் நீதிமன்று விதிக்கவில்லை.

எமது மனுவில் எதிர் மனுதாரர்கள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் எமக்கு தடை விதிக்கக் கூடாது என்றே கோரி இருந்தோம். எமது மனு மீதான விசாரணை எதிர் மனு தாரர்களின் பூர்வாங்க ஆட்சேபனையை ஏற்று மனு தள்ளுபடி செய்யப்பட்டதே தவிர நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்படவில்லை என தெரிவித்தார்.

அதேவேளை மேல் நீதிமன்றினால் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து ஊடகங்களுக்கு பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவிக்கையில், இதொரு வரலாற்று தீர்ப்பு எனவும், புலிகளை நினைவு கூறும் எந்தவொரு நிகழ்வையும் பொலிசார் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பாக சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனின் சட்டத்தரணிகள் குழாம் மற்றும் பொலிஸ் தரப்பில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண உட்பட சட்டமா அதிபர் திணைக்கள சட்டத்தரணிகள் பலர் கலந்து கொண்டனர்.

(சுமித்தி தங்கராசா, மயூரப்பிரியன்)

No comments:

Post a Comment