மாணவர் வீசாக்களில் சட்டவிரோதமான முறையில் ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டாம் : இலங்கை தூதரகம் அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, November 20, 2020

மாணவர் வீசாக்களில் சட்டவிரோதமான முறையில் ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டாம் : இலங்கை தூதரகம் அறிவிப்பு

(நா.தனுஜா) 

தொழில் வாய்ப்புகளைத் தேடுவதற்கும், ஐரோப்பிய நாடுகளில் குடியேறுவதற்குமாக மாணவர் வீசாக்களில் ரஷ்யாவிற்குள் பயணிக்கும் இலங்கையர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு தண்டனைகளும் அபராதமும் விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கும் நிலையில், ரஷ்யாவையோ அல்லது வேறு எந்த அண்டை நாடுகளையோ அடைவதற்கு இதுபோன்ற சட்டவிரோத வழிமுறைகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு ரஷ்யாவில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவுறுத்தியிருக்கிறது.

இது குறித்து ரஷ்யாவில் உள்ள இலங்கைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது இலங்கையின் போலி வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு எதிராக இலங்கையர்களிடமிருந்து பல எண்ணிக்கையான முறைப்பாடுகள் தூதரகத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

தொழில் வாய்ப்புகளைத் தேடுவதற்கும், ஐரோப்பிய நாடுகளில் குடியேறுவதற்குமாக மாணவர் வீசாக்களில் ரஷ்யாவிற்குள் பயணிக்கும் இலங்கையர்களின் எண்ணிக்கை பல ஆண்டுகளாக வெகுவாக அதிகரித்து வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு ரஷ்ய அதிகாரிகள் 27 இலங்கையர்களை கைது செய்ததுடன், அவர்களில் 17 பேர் சிறைத் தண்டனையை நிறைவு செய்ததன் பின்னர் ஏற்கனவே இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். தமது சட்டசெயன்முறை தொடர்வதன் காரணமாக ரஷ்யாவின் பல்வேறு நகரங்களில் இன்னும் 10 பேர் தடுப்பு முகாம்களில் உள்ளனர்.

இலங்கையின் பல வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்கள், ரஷ்யாவில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் வேறு சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் இந்த சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

பெரும்பாலும், மாணவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டு, அதிக சம்பளத்திற்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ளல் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் எல்லைகளைக் கடப்பதற்கான வசதிகளை வழங்குதல் போன்ற தவறான வாக்குறுதிகளுடன் மாணவர் வீசாக்களில் அனுப்பப்படுகின்றார்கள்.

மேலும் ரஷ்யாவுக்கான பயணத்திற்காக முகவர்களால் மாணவர்களிடமிருந்து கணிசமான அளவு பணம் அறவிடப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் அவர்களை மாநில எல்லைகளின் ஊடாக பெலாரஸ், உக்ரைன் போன்ற நாடுகளுக்கும் ஐரோப்பாவிற்கும் மாறுவேடத்தில் ஆட்கடத்தல் முறைமையில் கொண்டு செல்வதற்கான சட்டவிரோத முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மாணவர்களை சுரண்டுவதனையும், முறையான சட்ட முறைமைகளைப் புறக்கணித்து பணத்தைப் பெறுவதனையும் குறிக்கோள்களாகக் கொண்ட மோசடி முகவர்களிடம் பல இலங்கை மாணவர்கள் சிக்கியுள்ளனர். 

ரஷ்யாவையோ அல்லது வேறு எந்த அண்டை நாடுகளையோ அடைவதற்கு இதுபோன்ற சட்டவிரோத வழிமுறைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ரஷ்யாவில் உள்ள இலங்கைத் தூதரகம் இலங்கையர்களை அறிவுறுத்துகின்றது.

No comments:

Post a Comment