ஐக்கிய இலங்கைக்குள்ளே ஒரு தீர்வை எதிர்பார்க்கின்றோம், தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைகள் தொடர்ந்தும் காணப்படுகின்றன : செல்வம் அடைக்கலநாதன் - News View

Breaking

Post Top Ad

Saturday, November 21, 2020

ஐக்கிய இலங்கைக்குள்ளே ஒரு தீர்வை எதிர்பார்க்கின்றோம், தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைகள் தொடர்ந்தும் காணப்படுகின்றன : செல்வம் அடைக்கலநாதன்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) 

ஐக்கிய இலங்கைக்குள்ளே ஒரு தீர்வை எதிர்பார்க்கின்றோம். அதன் பிரகாரம் வாழ்வதற்கான முயற்சியை நாங்கள் மேற்கொள்கின்றோம். ஆனால் அடக்கு முறைகளால் தொடர்ந்து அடக்கப்படுகின்றபோது அதனை உடைத்தெறிவதற்கான சந்தர்ப்பத்தை நாங்கள் தவிர்க்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் அதில் உயிரிழந்தவர்களை நினைவு கூறுவது தடைப்படும் அவலநிலை நாட்டில் காணப்படுகிறது. ஜே.வி.பியை எடுத்துப்பாருங்கள், அவர்கள் போராட்ட இயக்கமாக இருந்தார்கள். ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு அவர்கள் அரசியல் நீரோட்டத்தில் இணைந்துள்ளனர். அவர்கள் அவர்களது போராட்டத்தில் உயிரழந்தவர்களை நினைவு கூறுகின்றனர். எனினும் தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைகள் தொடர்ந்தும் காணப்படுகின்றன.

ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தவர்களை நினைவு கூறுவதற்கு ஏன் தடையாக இருக்கின்றீர்கள் எனக் கேட்க விரும்புகின்றேன். அடக்கு முறைகளும் தடைகளுமே ஆயுத போராட்டத்துக்கு எமது இளைஞர்களை அன்று தூண்டியிருந்தன. எந்த எதிர்பார்ப்புக்களும் இல்லாமல் தனது சமூகத்துக்காக போராடி உயிர் நீர்த்த அந்த போராளிகளை இந்த சபையிலேயே நினைவு கூறுவதையிட்டு நான் பெருமிதடைகின்றேன்.

வடக்கு கிழக்கில் கடற்றொழில் மற்றும் விவசாயம் என்பன மக்களின் வாழ்வாதாரத் தொழில்களாகக் காணப்படுகின்றன. விவசாயத்தை எடுத்துக் கொண்டால் இந்த வரவு செலவுத் திட்டத்தில் விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு வரிச் சலுகை கொடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ள போதும், தமிழர்களின் பூர்வீக நிலங்கள் பறிக்கப்படும் சந்தர்ப்பங்களே காணப்படுகின்றன.

விவசாய உற்பத்திகளை வரியில்லாது நீக்க வேண்டுமாயின் எங்கள் மக்களுக்கு விவசாயம் செய்ய நிலம் வேண்டும். அந்த நிலத்தை வன இலாகா அபகரித்துக் கொண்டிருக்கிறது. விவசாயிகளுக்கு கால்நடை என்பதும் பிரதான விடயமாகும். கால்நடைக்கான மேய்ச்சல் தரைகள் பாரிய பிரச்சினைகளாகக் காணப்படுகின்றன. கால்நடைகளை மேய்ப்பதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்படவில்லை.

இவ்வாறான சூழ்நிலை இருக்கும் போது விவசாய உற்பத்திகள் மேம்படுத்தப்படும் எனக் கூறப்படுவது எப்படி நியாயமாகவிருக்கும். நிலம் அபகரிக்கப்படும் போதுதான் ஆயுதப் பூராட்டம் ஆரம்பமானது. இந்த நிலைமைக்கு அரசாங்கம் மீண்டும் அனுமதிக்கக் கூடாது. விவசாயிகளின் காணிகள் வன பரிபாலனத் திணைக்களத்திடமிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.

வடக்கு, கிழக்கில் உள்ள சகல விவசாயிகளும் கடனாளிகளாகவும், ஏழைகளாகவும் காணப்படுகின்றனர். நெல்லுக்கு நியாய விலையை வழங்கி உரிய விலையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad