முஸ்லிம்களுக்கு ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் - பகவந்தலாவ ராகுல ஹிமி ஜனாதிபதியிடம் வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 14, 2020

முஸ்லிம்களுக்கு ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் - பகவந்தலாவ ராகுல ஹிமி ஜனாதிபதியிடம் வேண்டுகோள்

கொவிட்-19 தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸா தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டலின்படி அடக்கம் செய்வதற்கு ஜனாதிபதி ஆவன செய்ய வேண்டும். சடலங்களை வைத்துக் கொண்டு அரசியல் செய்வதற்கு இடமளிக்க வேண்டாம். இஸ்லாமியர்களின் மனதை நோகடித்து அவர்களை கோபத்துக்குள்ளாக்காதீர்கள். அது எமக்குப்பாவம். முஸ்லிம்களுக்கு ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என பகவந்தலாவ ராகுல ஹிமி தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் இவ்விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், ‘ இஸ்லாமியர் ஒருவர் மரணித்து விட்டால் அவரது உடலை என்ன செய்ய வேண்டும் என அம்மதத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. என்ன கொடுமை மனிதன், மனிதனால் பழிவாங்கப்படுகிறான். இப்போது நாட்டில் புதிய கதையொன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இறந்தவர்களின் உடலை எரிப்பதா? அடக்கம் செய்வதா? என்று. இறந்தவர்களின் உடலை எரிப்பது பாவமென்று இஸ்லாமிய தர்மம் கூறியுள்ளது. இறந்தவர்களின் உடலுக்கு மரியாதை செய்ய வேண்டும்.

இலங்கையில் ஏன் இந்த நிலைமை? இறந்த ஜனாஸாக்களை வைத்துக் கொண்டு அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். கவலையாக இருக்கிறது. கேவலம். மனித குணம் இப்படியா? என்று எண்ணும் போது மிகவும் கவலையாக இருக்கிறது. இயற்கையும், பிரபஞ்சமும் இதையா எதிர்பார்க்கிறது. எங்களை விட உயர்ந்த நாடுகளில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து கொண்டிருக்கிறார்கள். அமெரிக்கா, கனடா, இத்தாலி, சிங்கப்பூர் என பல நாடுகள் நல்லடக்கம் செய்து கொண்டிருக்கின்றன.

அங்கு சடலங்கள் எரிக்கப்படவில்லை. சுகாதாரத்துறை என்ன கூறுகிறதோ அதை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஏன் இலங்கை நாட்டில் மாத்திரம் தகனம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்நாட்டின் தலைவர்களே இவ்விவகாரம் தொடர்பில் சரியான ஒரு பதிலை இந்நாட்டு மக்களுக்கு வழங்குங்கள். என்ன நடைமுறை என இலங்கை அரசாங்கம் சரியான சட்டமொன்றினை நடைமுறைப்படுத்தப்படுத்த வேண்டும். இல்லையேல் ஜனாதிபதி மக்களின் மனதை ஆறுதல்படுத்தும் வகையில் வார்த்தையொன்றினைக் கூற வேண்டும்

மண்ணில், புதைத்தால் விஷக்கிருமிகள், வைரஸ் வெளியில் பரவும் என்கிறார்கள். வைரஸ் தொற்றாளர்கள் மருந்துவமனையில் இருக்கும்போது கழிப்பறை செல்வதில்லையா? மலசலம் கழிப்பதில்லையா? இதன் மூலம் விஷக்கிருமிகள் வைரஸ் பரவமாட்டதா? வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் கொவிட்-19 தொற்றாளர்களாக இனங்காணப்பட்டால் மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள். அவர்கள் தமது வீடுகளில் கழிப்பறை செல்லவில்லையா? பக்கத்தில் வேறு வீடுகள் இல்லையா? அந்த வைரஸ் பக்கத்து வீடுகளுக்கு செல்லாதா?

ஏன் இத்தனை முட்டாள்களாக கதை கூறுகிறார்கள். இதுவா நாட்டின் சட்டம். மக்கள் மனதை நோகடிக்காதீர்கள். இஸ்லாமியர்களின் மனதை நோகடித்து அவர்களை கோபத்துக்கு உள்ளாக்காதீர்கள். அது எமக்குப் பாவம். இறந்த உடலாக இருந்தாலும் முஹம்மது நபி (ஸல்) எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்கள். எனவே முஸ்லிம்களின் உரிமையைப் பெற்றுக் கொடுங்கள். விஷக்கிருமிகள் பரவும் என ஏன் பொய்கூறுகிறார்கள். இறந்த உடல்களை வைத்துக் கொண்டு அரசியல் செய்யாதீர்கள் என்றார். 

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
Vidivelli

No comments:

Post a Comment