அனைத்தையும் அறிந்த தலைவர்கள் உலகில் எங்குமே இல்லை, ஆனால் தமக்கு அனைத்தும் தெரியும் என்றே சில தலைவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் - ருவன் விஜேவர்தன - News View

About Us

About Us

Breaking

Friday, November 20, 2020

அனைத்தையும் அறிந்த தலைவர்கள் உலகில் எங்குமே இல்லை, ஆனால் தமக்கு அனைத்தும் தெரியும் என்றே சில தலைவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் - ருவன் விஜேவர்தன

(நா.தனுஜா) 

நாட்டின் பொருளாதாரம் எத்தகைய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கிறது என்ற உண்மையை அரசாங்கம் மக்களுக்கு கூற வேண்டும். நாட்டு மக்கள் பெருமளவான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் உண்மைகளை அவர்களிடமிருந்து மறைத்துச் செயற்படக் கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயமான சிறிகொத்தாவில் வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியடைந்திருப்பதுடன் பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிபீடமேறிய அரசாங்கம் அதன் வரவு செலவுத் திட்டத்தையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறது.

அனைத்தையும் அறிந்த தலைவர்கள் உலகில் எங்குமே இல்லை. ஆனால் தமக்கு அனைத்தும் தெரியும் என்றே சில தலைவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் தலைவர் என்பவர் ஒவ்வொரு துறைகளிலும் நன்கு தேர்ச்சி பெற்றவர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டு, அதனடிப்படையில் நாட்டை அபிவிருத்திப் பாதையை நோக்கி நகர்த்திச் செல்பவரேயாவார். 

மாறாக 'எனக்கு அனைத்தும் தெரியும். நான் கூறுபவையே சட்டம். நான் கூறுபவையே சுற்றுநிருபம். அரசாங்கம் எனக்குச் சொந்தமானது. நான் நினைப்பவையே சரி' என்று கருதுகின்ற ஆட்சியாளர்கள், அந்த நாட்டில் முன்னேறிச் செல்ல முடியாது. 

அதேபோன்று அவ்வாறான ஆட்சியாளர்களைக் கொண்ட நாடுகளும் முன்னேற்றமடையாது. இதனை தற்போதைய அரசாங்கத்திற்கு நினைவூட்ட விரும்புகின்றோம். ஏனெனில் கடந்த காலத்தில் ஜனாதிபதியும் மேற்கண்டவாறான வசனங்களைக் கூறுவதை அவதானித்தோம். உண்மையில் இவ்வாறு நாட்டை நிர்வகிக்க முடியாது.

அண்மைக் காலமாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளன. எனவே அரசாங்கம் எதிர்கொள்ளக் கூடிய பிரச்சினைகளை எம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது. 

ஆனால் நாட்டின் பொருளாதார நெருக்கடி கொரோனா வைரஸ் பரவலின் விளைவாக ஏற்பட்டதல்ல. மாறாக கடந்த 2019 நவம்பரில் ஜனாதிபதியாகத் தெரிவான கோத்தாபய ராஜபக்ஷ, மக்களுக்கு நிவாரண உதவியை வழங்க வேண்டும் எனக்கூறி பாரிய வரிவிலக்களித்தார். அதன் காரணமாகவே அரசாங்கத்திற்குக் கிடைக்கப்பெற வேண்டிய வருமானம் கிடைக்காமல் போனது. 

இவ்வாறானதொரு பின்னணியில் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் பயனற்றது என்று அதனை முழுமையாக நிராகரித்து விடமுடியாது. அதில் உள்ளடக்கப்பட்டுள்ள பல்வேறு செயற்திட்டங்களினதும் நோக்கங்கள் சிறந்தவையாகவே இருக்கின்றன. 

எனினும் நாட்டின் பொருளாதாரம் எத்தகைய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கிறது என்ற உண்மையை அரசாங்கம் மக்களுக்கு கூற வேண்டும். தற்போது நாட்டு மக்கள் பெருமளவான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்திருக்கின்றனர். எனவே அரசாங்கம் உண்மைகளை அவர்களிடமிருந்து மறைத்துச் செயற்படக்கூடாது. 

அதேபோன்று எதிர்வரும் வருடத்தில் பெருமளவான பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்படும். அவற்றை எவ்வாறு கையாளப்போகிறது என்பது குறித்தும் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment