கடன் பெறுவதும் பணத்தை அச்சிடுவது மாத்திரமே வரவு செலவு திட்டத்தில் பிரேரிக்கப்பட்டுள்ளது, சங்கிரில்லாவுக்கு பக்கத்தில் இருக்கும் காணியை விற்றுள்ளனர் - விஜித ஹேரத் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 19, 2020

கடன் பெறுவதும் பணத்தை அச்சிடுவது மாத்திரமே வரவு செலவு திட்டத்தில் பிரேரிக்கப்பட்டுள்ளது, சங்கிரில்லாவுக்கு பக்கத்தில் இருக்கும் காணியை விற்றுள்ளனர் - விஜித ஹேரத்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) 

கடன் பெறுவதும் பணத்தை அச்சிடுவது மாத்திரமே வரவு செலவு திட்டத்தில் பிரேரிக்கப்பட்டுள்ளது. மாறாக வருமானத்தை ஈட்டிக் கொள்வதற்கான எந்த வழிமுறைகளும் அதில் இல்லை. அரசாங்கத்தின் இயலாமையே இதற்கு காரணமாகும் என தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நல்லாட்சி அரசாங்க காலத்தில் 6 ட்ரில்லியன் ரூபா கடன் பெற்று நாட்டை கடன் பொறிக்குள் தள்ளியதாக அரசாங்க தரப்பினர் குற்றம் சாட்டியிருந்தனர். அதே நிலையைத்தான் அரசாங்கம் தற்போது இரண்டு வருடத்தில் 5 ட்ரில்லியன் கடன் பெற்றுக் கொள்கின்றது. 2021 நிறைவடையும்போது நாட்டின் மொத்த கடன் தொகை 18 ட்ரில்லியனாகின்றது. 

ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வந்தபோது இந்த அரசாங்கம் கடனை உயர்த்தியுள்ளதாக குற்றம் சாட்டி, அதனை அடைப்பதற்கு மேலும் கடன் பெற்றது. தற்போது இந்த அரசாங்கமும் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியை குற்றம்சாட்டி மேலும் கடன் பெற்றுள்ளது.

அதனால் அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில் கடன் பெறுவதும் பணத்தை அச்சிடுவதும் மாத்திரே பிரேரிக்கப்பட்டிருக்கின்றது. வருமானத்தை ஈட்டிக் கொள்ள எந்த பிரேரணையும் இல்லை. அதனால்தான் இந்த அரசாங்கம் தோல்வி என தெரிவிக்கின்றோம். 

கடன் பெறுவதும் பணம் அச்சிடுவதும் அரசாங்கம் ஒன்றின் இயலாமையின்போதாகும். இந்த அரசாங்கத்தின் இயலாமை ஒரு வருடத்திலே தெரியவந்திருக்கின்றது.

அத்துடன் கடந்த அரசாங்கம் அரச சொத்துக்களை விற்றதாக குற்றம் சாட்டியும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அவற்றை மீண்டும் மீட்டெடுப்பதாகவும் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், முதலாவது அமைச்சரவையிலேயே சங்கிரில்லாவுக்கு பக்கத்தில் இருக்கும் 3 அரை ஏக்கர் காணியை சிங்கப்பூர் கம்பனி ஒன்றுக்கு விற்றுள்ளது.

அதனால் கடந்த அரசாங்கம் போன்றே இவர்களும் நாட்டின் சொத்துக்களை விற்றும் கடன் பெற்றும் பணம் அச்சிட்டுமே நாட்டை கொண்டு செல்ல முயற்சிக்கின்றாகளே தவிர, நாட்டுக்கு வருமானத்தை ஈட்டக்கூடிய எந்த வேலைத்திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை என்றார்.

No comments:

Post a Comment