பெண்களை தலைமையாகக் கொண்ட குடும்பங்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் எந்தவொரு நிதியும் ஒதுக்கப்படவில்லை - தவராசா கலையரசன் - News View

Breaking

Post Top Ad

Thursday, November 19, 2020

பெண்களை தலைமையாகக் கொண்ட குடும்பங்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் எந்தவொரு நிதியும் ஒதுக்கப்படவில்லை - தவராசா கலையரசன்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களை தலைமையாகக் கொண்ட பல குடும்பங்கள் வடக்கு, கிழக்கில் இருக்கின்றன. இவ்வாறானவர்களுக்குக்கூட வரவு செலவுத் திட்டத்தில் எந்தவொரு நிதியும் ஒதுக்கப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அல்லலுற்றுக்கொண்டிருக்கும் மக்கள் சார்ந்து எந்த நிதியும் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படவில்லை. இந்த நாட்டில் நீண்ட போர் சூழுல் நடைபெற்று அங்கிருந்த மக்கள் முழுவதுமாக மீளக் குடியமர்த்தப்படாத நிலையில் அவர்களை எள்ளளவேனும் உள்வாங்கப்படாது வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பது அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

நாம் நாட்டில் சமாதானத்தையும், சுபீட்சத்தையுமே விரும்புகின்றோம். அனைத்து மக்களுடனும் கைகோர்த்து இணைந்து வாழ விரும்புகின்றோம். எமது மக்களுக்கு கிடைக்க வேண்டிய அபிவிருத்திகள் இன்னமும் கிடைக்கப் பெறாமல் இருப்பது கவலையளிக்கறிது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களை தலைமையாகக் கொண்ட பல குடும்பங்கள் வடக்கு, கிழக்கில் இருக்கின்றன. இவ்வாறானவர்களுக்குக்கூட வரவு செலவுத் திட்டத்தில் எந்தவொரு நிதியும் ஒதுக்கப்படவில்லை. இது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போன்று அமைந்துள்ளது. 

கடந்த காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகள் எதுவும் தற்பொழுது தொடரப்படவில்லை. அம்பாறை நகரத்தில் எந்தத் தமிழ் மக்களும் இல்லை. பல தசாப்தங்களுக்கு முன்னர் இனங்களும் ஒன்றாக இங்கு வாழும் நிலை இருந்தது. எனினும், எமது மக்களை மாற்று இனமாகப் பார்க்கும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad