ஹொங்கொங்கில் ஜனநாயக ஆதரவு சட்டசபை உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 11, 2020

ஹொங்கொங்கில் ஜனநாயக ஆதரவு சட்டசபை உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா

ஹொங்கொங் சட்டசபையில் இருந்து ஜனநாயக ஆதரவு உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.

சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டம் ஹொங்கொங்கில் அமுல்படுத்தப்பட்டதில் இருந்தே ஜனநாயகத்திற்கு ஆதரவான அரசியல் கட்சியினர் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். 

மேலும், பல்வேறு சமூக ஆர்வலர்களும், சுதந்திரத்திற்கான ஆதரவாளர்களும் சீன அரசால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மக்கள் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஹொங்கொங்கின் சட்டசபை உள்விவகாரங்களிலும் சீனா நேரடியாக தலையிடும் நிலை ஏற்பட்டுள்ளது. 

ஹொங்கொங் சட்டசபை மொத்தம் 70 உறுப்பினர்களை கொண்டது. அதில் 35 பேர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவர். 30 பேர் ஹொங்கொங்கை சேர்ந்த வணிகர்கள், வங்கி அமைப்பு போன்றவர்களை கொண்ட குழுக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்கள் சீனாவின் ஆதரவாளர்களாகவே இருப்பார்கள். எஞ்சிய 5 பேர் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட கவுன்சிலர்களாக இருப்பர்.

இதற்கிடையில், தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் வகையில் ஹொங்கொங் சுதந்திரதிற்கு ஆதரவாக செயல்படும் சட்டசபை உறுப்பினர்களை நீதிமன்றத்திற்கு செல்லாமல் அவர்களது பதவியில் இருந்து நீக்க ஹொங்கொங் அரசாங்கத்திற்கு உரிமை வழங்கும் வகையிலான சட்டம் சீன நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட உடன் ஹொங்கொங் சுதந்திரத்திற்கு ஆதரவாக சட்டசபை உறுப்பினர்கள் 4 பேரை ஹொங்கொங் அரசாங்கம் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியது. இந்த சம்பவம் ஹொங்கொங் ஜனநாயக ஆதரவு உறுப்பினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவர்கள் நால்வரும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாய் விளங்குவதாகக் கூறப்பட்டது. ஆனால் மேல் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

70 உறுப்பினர்களைக் கொண்ட ஹொங்கொங் சட்டமன்றத்தில் 19 பேர் ஜனநாயகத்தை ஆதரிப்பவர்களாக உள்ளனர். தங்களில் யாரேனும் பதவி நீக்கம் செய்யப்பட்டால் அனைவரும் ஒன்றுபட்டுப் பதவி விலகப்போவதாக கடந்த செவ்வாய்க்கிழமை அவர்கள் மிரட்டல் விடுத்திருந்தனர். 

இந்நிலையில், 4 சட்டசபை உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்ததை கண்டித்து ஜனநாயக ஆதரவு சட்டசபை உறுப்பினர்களான எதிர்க்கட்சியினர் 15 பேரும் தங்கள் பதவியை நேற்று ராஜினாமா செய்தனர். 

தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட நால்வர் உட்பட 12 உறுப்பினர்கள் அடுத்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஹொங்கொங்கில் சீனா தனது பிடியை இருக்கு நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது.

இந்த ராஜினாமா ஹொங்கொங்கில் மக்கள் போராட்டத்திற்கு வழிவகுக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஹொங்கொங் பிராந்தியம் 1997ஆம் ஆண்டுவரை பிரிட்டிஷ் காலனியாக இருந்தது. அப்போது சீனா வசம் ஹொங்கொங் ஒப்படைக்கப்பட்டபோது, ஒரே நாடு, இரு ஆளுகை என்ற கோட்பாட்டை பின்பற்றி அங்கு வாழும் மக்களின் சுயாதீன உரிமைகள், சுதந்திரத்தை 2047ஆம் ஆண்டுவரை பராமரிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

No comments:

Post a Comment