தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் முழு பொலிஸ் பிரிவும் முடக்கப்பட வேண்டுமா என்பது குறித்து ஆராயப்படுகிறது - இராணுவத் தளபதி - News View

About Us

About Us

Breaking

Thursday, November 19, 2020

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் முழு பொலிஸ் பிரிவும் முடக்கப்பட வேண்டுமா என்பது குறித்து ஆராயப்படுகிறது - இராணுவத் தளபதி

(எம்.மனோசித்ரா) 

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் முழு பொலிஸ் பிரிவும் முடக்கப்பட வேண்டுமா என்பது குறித்து ஆராயப்படுகிறது. அபாயம் காணப்படுமானால் எந்தவொரு பிரதேசமானாலும் தனிமைப்படுத்தப்பட வேண்டியது முக்கியமாகும். அவ்வாறில்லை என்றால் அநாவசியமாக சாதாரண பிரதேசங்களையும் தனிமைப்படுத்தி வைத்திருக்க வேண்டிய தேவை கிடையாது என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள், வீடுகளிலேயே பதிவாகும் மரணங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படும் இலங்கையர்கள் தொடர்பில் தெரிவிக்கையில் இதனைத் தெரிவித்த இராணுவத் தளபதி மேலும் கூறியதாவது புதனன்று நாட்டில் 327 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அவர்களில் இருவர் கடற்சார் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களாவர். எஞ்சிய 325 பேரும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர். 325 பேரில் 157 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். ஏனையோர் கம்பஹா போன்ற சில மாவட்டங்களிலிருந்தும், சிறைச்சாலை உள்ளிட்டவற்றிலிருந்தும் இனங்காணப்பட்டனர்.

கொழும்பு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் மிகக் குறைந்தளவிலான தொற்றாளர்களே இனங்காணப்படுகின்றனர். இதேவேளை கொழும்பு மாவட்டத்தில் இனங்காணப்படுபவர்களில் பெருமளவானோர் கொழும்பு மாநகர சபையை அண்மித்த பிரதேசங்களிலேயே இனங்காணப்படுகின்றனர். இந்நிலையிலேயே கொழும்பு மாவட்டத்தில் வட பகுதியை நாம் தனிமைப்படுத்தியிருக்கின்றோம். இந்த பகுதிகளிலேயே அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகிறார்கள்.

கம்பஹா மாவட்டத்தில் கொத்தணிகளாக தொற்றாளர்கள் இனங்காணப்படுவது குறைவடைந்துள்ளது. எனினும் கொழும்பு வடக்கை அண்மித்த கம்பஹா மாவட்டத்தின் தென் பகுதியில் மாத்திரமே தற்போது தொற்றாளர்கள் இனங்காணப்படுகிறார்கள். கொவிட் கட்டுப்படுத்தலுக்கான ஜனாதிபதி செயலணி தினமும் கூடி ஜனாதிபதியுடன் கலந்துரையாடலிலும் ஈடுபடுகிறது. அதன் அடிப்படையிலும் தொடர்ச்சியாக நாம் முன்னெடுத்து வருகின்ற செயற்பாடுகளுக்கும் அமையவே தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலும் முழு பொலிஸ் பிரிவும் முடக்கப்பட வேண்டுமா என்பது குறித்தும் ஆராய்ந்து வருகின்றோம். உண்மையில் முழுமையாக பிரதேசங்களை முடக்குவது அவசியமல்ல. அபாயம் காணப்படுமானால் எந்தவொரு பிரதேசமானாலும் தனிமைப்படுத்தப்பட வேண்டியது முக்கியமாகும். அவ்வாறில்லை என்றால் சாதாரண பிரதேசங்களையும் அநாவசியமாக தனிமைப்படுத்தி வைத்திருக்க வேண்டிய தேவை கிடையாது.

எனவே குறிப்பிட்டவொரு பொலிஸ் பிரிவினை தனிமைப்படுத்த தீர்மானித்தாலும், அந்த பொலிஸ் பிரிவிற்குள் அபாயமற்ற பிரதேசம் காணப்படுமாயின் அதனை முடக்காமலிருப்பதே எமது எதிர்பார்ப்பாகும். அதேபோன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிக்குள் காணப்படும் அபாயம் மிக்க தொடர்மாடி குடியிருப்புக்கள் போன்றவற்றை பிரத்தியேகமாக தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். 

வீடுகளில் உயிரழிப்பவர்கள்

வீடுகளில் உயிரிழப்பவர்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சிற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருக்கின்றார். எவ்வாறிருப்பினும் ஏதேனுமொரு நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் இருப்பார்களாயின் அவர்களுக்கு சிகிச்சை தேவையேற்படின் அச்சமின்றி வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு இதற்கு முன்னரும் பல தடவைகள் அறிவித்திருக்கின்றோம்.

இதுவரையில் வீடுகளிலேயே பதிவாகிய மரணங்களுக்கான காரணம் நாட்பட்ட நோயின் தாக்கம் அதிகரித்தமையாகும் என்று சுகாதார அமைச்சு அறிவித்திருக்கிறது. எவ்வாறிருப்பினும் நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள வீடுகளிலுள்ள உறவினர்களை இவ்விடயத்தில் தெளிவுடன் செயற்படுமாறு வலியுறுத்துகின்றோம். 

வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு அழைத்து வரப்படும் இலங்கையர்கள் 

புதனன்று 340 இலங்கையர்கள் வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர். இன்று சுமார் 100 பேர் நாட்டை வந்தடைந்தனர். கொவிட் கட்டுப்பாட்டுக்கான செயலணியிடம் அறிவித்த பின்னரே இவ்வாறு வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளோம். இவ்வாறு அழைத்து வரப்படுபவர்கள் நிச்சயம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment