நாட்டின் அவசியமான துறைகளுக்கு நிதி ஒதுக்க வேண்டிய நேரத்தில் பாதுகாப்பு அமைச்சிற்கு அளவுக்கு அதிகமான நிதியை ஒதுக்கியுள்ளதன் மூலம் அரசாங்கம் இன்னொரு யுத்தத்தை எதிர்பார்க்கின்றதா - விக்கினேஸ்வரன் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 19, 2020

நாட்டின் அவசியமான துறைகளுக்கு நிதி ஒதுக்க வேண்டிய நேரத்தில் பாதுகாப்பு அமைச்சிற்கு அளவுக்கு அதிகமான நிதியை ஒதுக்கியுள்ளதன் மூலம் அரசாங்கம் இன்னொரு யுத்தத்தை எதிர்பார்க்கின்றதா - விக்கினேஸ்வரன்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 

நாட்டின் அவசியமான துறைகளுக்கு நிதி ஒதுக்க வேண்டிய நேரத்தில் பாதுகாப்பு அமைச்சிற்கு அளவுக்கு அதிகமான நிதியை ஒதுக்கியுள்ளதன் மூலம் அரசாங்கம் இன்னொரு யுத்தத்தை எதிர்பார்க்கின்றதா என சபையில் கேள்வி எழுப்பிய தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் அவ்வாறு ஒரு யுத்தம் என்றால் அது தமிழர்களுடனா, இந்தியாவுடனா அல்லது மேற்கு நாடுகளுடனா எனவும் வினவினார். 

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனின் கூறினார். 

அவர் மேலும் கூறுகையில், அரசாங்கதின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு செலவுக்கு அபரிமிதமான தொகையை ஒதுக்கியுள்ளனர். எதற்காக இவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது, யாருடன் யுத்தத்தை மேற்கொள்ள இந்த நிதித் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. 

இன்னொரு யுத்தத்தை எதிர்பார்த்தா அரசாங்கம் இந்த தொகையை பாதுகாப்பு அமைச்சிற்கு ஒதுக்கியுள்ளது. அப்படி போர் என்றால் யாருடன் தமிழர்களுடனா அல்லது இந்தியர்களுடனா அல்லது மேற்கத்தைய நாட்டவர்களுடனா? யாரைப்பார்த்து அரசாங்கம் அஞ்சுகின்றது. எதற்கான யுத்த கால வரவு செலவு திட்டமொன்றை சமாதான காலங்களில் முன்வைத்துள்ளீர்கள். 

என்னைப் பொறுத்தவரை இந்த வரவு செலவு திட்டத்தில் குறைந்த நிதியை பாதுகாப்பிற்கும், அதிகளவு நிதியை நுண் பொருளாதார மற்றும் நடுத்தர வர்த்தக செயற்பாடுகளுக்கு ஒதுக்கியிருக்க வேண்டும்.

நீங்கள் உங்கள் முகத்துடன் கோபித்துக் கொண்டு உங்கள் மூக்கை வெட்டப் பார்க்கின்றீர்கள். நாட்டின் ஒரு சாராரை சந்தேகக்கண் கொண்டு பார்ப்பதால்தான் போர்க்கருவிகள், பீரங்கிகள், தற்பாதுகாப்பு கவசங்களை வாங்கிக் குவிக்கின்றீர்கள்.

காலாட் படைகளை அதிகரிக்கின்றீர்கள். பெரும்தொகை கடற்படை உபகரணங்களை வாங்குகின்றீர்கள். இதுவரை கண் மண் தெரியாமல் வாங்கிக் குவித்ததால்தானே எமது தேசிய கடன் இந்தளவக்கு உயர்ந்துள்ளது.

2021ஆம் ஆண்டில் நீங்கள் எதிர்பார்க்கும் வருமானம் 1.9 ட்ரில்லியன் ரூபா. உத்தேச செலவு என்றுமில்லாதவாறு 3.52 ட்ரில்லியன் ரூபாவாக உயரப்போகின்றது. 1.56 ட்ரில்லியன் ரூபா விழுக்காட்டை எப்படி சமாளிக்கப் போகின்றீர்கள்? இது நீங்கள் தமிழர்களை நம்பாததால் வந்தவினை. உங்கள் தேசிய கடன் எங்களையும் பாதிக்கின்றது என்பதனை மறந்த விடாதீர்கள்.

விரைவில் உங்களை நம்பத்தகுந்த கடன் கேட்பவர்களாக நாடுகள், நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏற்கனவே இருக்கும் கடனை அடைக்க முடியாது நீங்கள் தவிக்கின்றீர்கள். எவ்வாறு மேலும் கடன் தர முடியுமெனக் கேட்பார்கள். தமிழர்களை நம்பி அவர்களின் பிரச்சினைகளை தெரிந்து கொண்டு அவர்களுக்குரிய தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வேண்டிய காலம் மலர்ந்துள்ளது. நாம் நாட்டைப்பிரிக்க கேட்கவில்லை.

ஒரே நாட்டுக்குள் எம்மை நாமே ஆள வழி விடுங்கள் என்றே கேட்கின்றோம். அவ்வாறு செய்தால் நாமும் எமது இலட்சக்கணக்கான புலம்பெயர் தமிழ் உறவுகளும் உங்களுடன் சேர்ந்து இந்த நாட்டை முன்னேற்ற தயாராகவுள்ளோம்.

வடக்கு கிழக்கின் அபிவிருத்திகள் குறித்து அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தியிருக்க வேண்டும், யுத்தம் முடிந்து 11 ஆண்டுகள் ஆகின்ற போதிலும் இன்னமும் வறுமையான மாவட்டங்களாக காணப்படுகின்றது. எனவே வேலை வாய்ப்புகள், அபிவிருத்திகள் என்பவற்றிற்கு அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும். எனவே இதுகாலவரையும் சிந்தித்த வழியிலேயே சிந்திக்காது புது விதமாக சிந்திக்க பழகுங்கள் என்றார்.

No comments:

Post a Comment