மேல் மாகாணத்தில் சில பிரதேசங்கள் இன்று அதிகாலை 5.00 மணி முதல் விடுவிப்பு - மேலும் சில பகுதிகளில் முடக்கம் தொடர்ந்தும் நடைமுறையில் என்கிறார் இராணுவத் தளபதி - News View

Breaking

Post Top Ad

Sunday, November 29, 2020

மேல் மாகாணத்தில் சில பிரதேசங்கள் இன்று அதிகாலை 5.00 மணி முதல் விடுவிப்பு - மேலும் சில பகுதிகளில் முடக்கம் தொடர்ந்தும் நடைமுறையில் என்கிறார் இராணுவத் தளபதி

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் செயற்றிட்டத்தின் கீழ் மேல் மாகாணத்தில் சில பிரதேசங்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தலுக்கான முடக்கம் இன்று அதிகாலை முதல் நீக்கப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். 

கொழும்பின் சில பகுதிகள் இன்று அதிகாலை 05 மணி முதல் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சில பகுதிகளில் தனிமைப்படுத்தலுக்கான முடக்கம் தொடர்ந்தும் நடைமுறையிலிருக்குமென அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தின் புறக்கோட்டை, டாம் வீதி, மற்றும் மட்டக்குளி போலிஸ் பிரிவுகள் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் மீளாய்வுக்குட்படுத்தப்பட்டு எதிர்வரும் புதன்கிழமை அவற்றை திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சில பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ள நிலையில் கம்பஹா மாவட்டத்தில் ராகம மற்றும் நீர்கொழும்பு பொலிஸ் நிர்வாக பிரதேசங்களில் நேற்று அதிகாலை முதல் தனிமைப்படுத்தலுக்கான முடக்கம் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களை மேற்படி மத்திய நிலையம் நேற்று வெளியிட்டுள்ளது.

அதற்கமைய முகத்துவாரம், புளூமெண்டல், கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், ஆட்டுப்பட்டித் தெரு, வாழைத்தோட்டம் மாளிகாவத்தை, தெமட்டகொடை, மருதானை, ஆகிய பொலிஸ் நிர்வாக பிரிவுகளில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்கான முடக்கம் நடைமுறையிலிருக்குமென அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் வேகந்த கிராம உத்தியோகத்தர் பிரிவு பொரளை பொலிஸ் பிரிவில் வனாத்தமுல்லை கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவு ஆகியனவும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டிருக்கும் என்றும் அதன் நிலையம் தெரிவித்தது.

அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் பேலியகொடை, களனி,வத்தளை ஆகிய பிரதேசங்களும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்தது .

அது தொடர்பில் மேலும் தெரிவித்த இராணுவத் தளபதி மட்டக்குளி, ரன்திய உயன வீடமைப்பு தொகுதி பெர்குயூசன் வீதி தெற்கு பிரதேசம் ஆகியன தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும். மட்டக்குளியின் ஏனைய பகுதிகள் விடுவிக்கப்பட்டாலும் மேற்படி இரண்டு பகுதிகளும் தொடர்ந்து முடக்கப்பட்டிருக்கும்.

அதேவேளை இதுவரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படாத வெல்லம்பிட்டி பிரதேசத்தின் லக்சந்த வீடமைப்பு தொகுதி, சாலமுல்ல கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவு, விஜயபுர கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகியன தனிமைப்படுத்தலுக்கான முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கு மேலதிகமாக கொழும்பு மாவட்டத்தில் மேற்கூறப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்கள் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளன.

அதேவேளை கம்பஹா மாவட்டத்தில் வத்தளை, பேலியகொடை, களனி ஆகிய பொலிஸ் நிர்வாகபிரதேசங்கள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் தற்போது தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் நிலைமைகள் மீளாய்வு செய்யப்பட்ட பின்னர் எதிர்வரும் புதன்கிழமை விடுவிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment

Post Bottom Ad