ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அமெரிக்க போரில் 39 பேரை கொன்றது போர்க் குற்றம் - ஒஸ்ட்ரேலியா படை வீரர்கள் மீதான விசாரணை அறிக்கை வெளியானது - News View

Breaking

Post Top Ad

Thursday, November 19, 2020

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அமெரிக்க போரில் 39 பேரை கொன்றது போர்க் குற்றம் - ஒஸ்ட்ரேலியா படை வீரர்கள் மீதான விசாரணை அறிக்கை வெளியானது

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அமெரிக்க போரில், 39 பேரை ஒஸ்ட்ரேலியா அதிரடிப் படை வீரர்கள் சட்டத்துக்கு புறம்பான விதத்தில் கொன்றது போர்க்குற்றம் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது.

அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன், நியூயோர்க் உலக வர்த்தக மையம் ஆகியவற்றின் மீது பின்லேடனின் அல்கொய்தா பயங்கரவாதிகள் 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி விமானங்களை மோதி கொடூர தாக்குதல்கள் நடத்தினர்.

3 ஆயிரம் பேரை கொன்று குவித்த இந்த தாக்குதல்களைத் தொடர்ந்து, அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்த ஆப்கானிஸ்தான் தலீபான்கள் மீது அமெரிக்கா போர் தொடுத்தது.

இந்த போரில் அமெரிக்கா தலைமையிலான சர்வதேச கூட்டணி படைகளில் ஒஸ்ட்ரேலியாவின் அதிரடிப் படையும் இணைந்தது. இந்த அதிரடிப் படையினர் ஆப்கானிஸ்தான் சிறைக் கைதிகள், விவசாயிகள், அப்பாவி பொதுமக்கள் என 39 பேரை கொன்று குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

2009 இல் தொடங்கி 2012, 2013 ஆண்டுகளில் முக்கியமாக நடைபெற்ற இந்த போர்க் குற்றங்கள் தொடர்பாக மேஜர் ஜெனரல் நீதிபதி பால் பிரெட்டன் தலைமையில் ஒஸ்ட்ரேலியா ராணுவம் விசாரணை நடத்தியது. 57 சம்பவங்கள் மீதான விசாரணையில், 400 க்கும் மேற்பட்டவர்கள் சாட்சியம் அளித்தனர்.

இந்த விசாரணை முடிவில், ஆப்கானிஸ்தானில் ஒஸ்ட்ரேலியா அதிரடிப் படை வீரர்கள் சட்டத்துக்கு புறம்பான வகையில் 39 பேரை கொன்றதற்கு நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பான ஒஸ்ட்ரேலியா ராணுவ விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் ஒஸ்ட்ரேலியா அதிரடிப் படை வீரர்களுக்கு எதிரான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இது வெட்கக் கேடானது என ஒஸ்ட்ரேலியா பாதுகாப்பு படைத் தளபதி அங்கஸ் கேம்பல் வேதனை தெரிவித்துள்ளார்.

இந்த போர்க் குற்றங்கள் தொடர்பாக இன்னும் பணியாற்றி வருகின்ற அல்லது ஓய்வு பெற்றுள்ள 19 ஒஸ்ட்ரேலியா படை வீரர்கள் மீது பொலிஸாரை கொண்டு தொடர் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசாரணை அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நீதியை உறுதி செய்வதில் திடமாக இருப்பதாக ஒஸ்ட்ரேலியா கூறியதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad