கொரோனா தொற்றாளர் சென்ற இரண்டு மதுபானசாலைகளுக்கு பூட்டு - அட்டன் நகரமும் இரண்டாம் நாளாக வெறிச் சோடியது - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 28, 2020

கொரோனா தொற்றாளர் சென்ற இரண்டு மதுபானசாலைகளுக்கு பூட்டு - அட்டன் நகரமும் இரண்டாம் நாளாக வெறிச் சோடியது

கொரோனா தொற்றாளர் ஒருவர் சென்ற இரண்டு மதுபானசாலைகள் 14 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதுடன் அங்கு வேலை செய்தவர்கள் சுய தனிமைக்குற்படுத்தப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

கொட்டகலை, டிரேட்டன் பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானத்தையடுத்து அவர் கந்தகாடு மருந்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த நபர் கொட்டக்கலை நகரிலுள்ள இரண்டு மதுபானசாலைகளுக்கு சென்றுள்ளமை தெரிய வந்ததையடுத்து இரண்டு மதுபானசாலைகளும் சுகாதார பரிசோதகர்களினால் மூடப்பட்டுள்ளதுடன் அங்கு வேலை செய்தவர்கள் சுய தனிமைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

அட்டன் நகரம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து வர்த்தக நிலையங்களும் நேற்றும் இன்றும் மூடப்பட்டுள்ளன. இதனால் நகரப்பகுதி வெறிச்சோடி காணப்படுகின்றது.

சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் அறிவுறுத்தல்களை பின்பற்றி மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கின்றனர். ஒரு சிலர் வெளியில் நடமாடுவதை காணமுடிந்தாலும் அவர்களும் சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றியுள்ளனர்.

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்களுக்காக விசேட போக்குவரத்து சேவையை இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் வழங்கி வருகின்றன. அரச நிறுவனங்களுக்கும் குறைந்தளவான ஊழியர்கள் வருவதையே காணக்கூடியதாக இருந்தது.

அட்டன் நகரை சுய தனிமைப்படுத்தல் பிரதேசமாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா நேற்று அறிவித்த நிலையில் அட்டன் நகர வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு அட்டன் - டிக்கோய நகரபையினால் கிருமி நாசினி தெளிகப்பட்டதுடன், இன்று இரண்டாவது நாளாகவும் அட்டன் நகரம் மூடப்பட்டுள்ளது.

மலையக நிருபர் கிரிஷாந்தன்

No comments:

Post a Comment