சமூக இடைவெளி பேணுவது சமூகத் தொற்றைக் குறைப்பதற்கான முற்காப்பு : யாழ். போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் - News View

Breaking

Post Top Ad

Thursday, October 29, 2020

சமூக இடைவெளி பேணுவது சமூகத் தொற்றைக் குறைப்பதற்கான முற்காப்பு : யாழ். போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர்

சமூக இடைவெளி பேணல் என்பது சமூகத் தொற்றைக் குறைப்பதற்கான முற்காப்பு நடவடிக்கை என யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்தார்.

கொரோனா கால சமூக இடைவெளி பேணல் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சமூக இடைவெளி பேணல் என்பது சமூகத் தொற்றைக் குறைப்பதற்கான முற்காப்பு நடவடிக்கை. இதனை ஐந்து நிலைகளில் நோக்க வேண்டும்.

1.தனிமனித சமூக இடைவெளி 
2.குடும்பநிலை சமூக இடைவெளி 
3.நிறுவனநிலை சமூக இடைவெளி 
4.கிராமநிலை சமூக இடைவெளி 
5.பிரதேசநிலை சமூக இடைவெளி

தனி மனித சமூக இடைவெளி என்பது பொது இடத்தில் இருவருக்கு இடையே இருக்க வேண்டிய மிகக்குறைந்த தூரம்.

குடும்ப சமூக இடைவெளியைப் பேணல் என்பது ஒரு குடும்பத்தவர் கொரோனா காலத்தில் பிறிதொரு குடும்பத்துடன் தொடர்புகொள்ளும் தடவைகளை குறைப்பதாக அமையும்.

நிறுவன சமூக இடைவெளியைப் பேணல் என்பது கொரோனா காலத்தில் ஒரு நிறுவனமானது தனது செயல்பாட்டை இயக்கிக் கொண்டு இருக்கும்போது வேறு நிறுவனங்கள், பொது அமைப்புக்களுடன் உள்ள நேரடி தொடர்புகளை அத்தியாவசிய தேவையின் நிமித்தம் அன்றி மேற்கொள்ளக் கூடாது.

அடுத்து கிராம சமூக இடைவெளியைப் பேணல் என்பது குறித்த கிராமம், வேறு பிரதேச மக்களால் தனிமைப்படுத்தப்பட்டு இயற்கையாக இருந்தால் அக்கிராமத்திற்கு கொரோனாத் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியம் குறைவு. 

இறுதியாகப் பிரதேச நிலை சமூக இடைவெளியைப் பேணல் பூகோள பிரதேச ரீதியில் தனிமைப்பட்ட பிரதேசங்களில் மக்கள் நடமாட்டத்தை மட்டுப்படுத்துவதாலோ, தேவையற்ற விதத்தில் பயணங்கள் மேற்கொள்வதனைக் கட்டுப்படுத்துவதாலோ குறித்த பிரதேசங்கள் கொரோனாத் தொற்றில் இருந்து பாதுகாக்கப்படும்.

மேற்கூறிய ஐந்து நிலைகளில் சமூக இடைவெளி பேணப்படின், கொரோனாப் பரம்பல் வீதம் வெகுவாகக் குறைக்கப்படும். இவற்றுடன் தனி நபர் சுகாதாரப் பழக்கங்களான முகக் கவசம் அணிதல், கை கழுவுதல், உடற் தொடுகைகளைத் தவிர்த்தல் என்பனவும் முக்கியமானவையாகும் என்றார்.

யாழ். விஷேட நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad