பாகிஸ்தான் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் இருந்து பிரதமர் இம்ரான்கான் விடுவிப்பு - News View

Breaking

Post Top Ad

Thursday, October 29, 2020

பாகிஸ்தான் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் இருந்து பிரதமர் இம்ரான்கான் விடுவிப்பு

பாகிஸ்தான் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் இருந்து பிரதமர் இம்ரான்கானை விடுவித்து, பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப் பிரதமர் பதவி வகித்தபோது அவரது ஆட்சிக்கு எதிராக தற்போதைய பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் (பி.டி.ஐ.) கட்சியினர் போராட்டம் நடத்தி வந்தனர்.

அந்த வகையில் 2014ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 31ஆம் திகதி, இம்ரான்கான் கட்சியினரும், பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீக் (பி.ஏ.டி.) கட்சியினரும் பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்குள்ளும், பிரதமர் இல்லத்துக்குள்ளும் அணி வகுத்து சென்று தாக்குதல் நடத்தினர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிசார் மீதும் மோதினர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அமைச்சர்களான ஷா மக்மது குரேஷி, பெர்வேஸ் கட்டாக், சாப்கத் மெக்முத், ஆசாத் உமர் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை, இஸ்லாமாபாத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ராஜா அவாத் அப்பாஸ் ஹசன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

இந்த வார தொடக்கத்தில், தன் மீதான வழக்கை நடத்துவதற்கு அரசு தரப்பு ஆர்வம் காட்டாததால் தன்னை விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் இம்ரான்கான் தனது வக்கீல் அப்துல்லா பாபர் அவான் மூலம் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.

பாகிஸ்தானில் அரசு தரப்பு வக்கீல்கள் அரசின் அறிவுரைகளை பெற்றுத்தான் செயல்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) அரசு செயல்பட்டபோது, நவாஸ் ஷெரீப் அரசின் அறிவுரைப்படி இந்த வழக்கை அரசு தரப்பு வக்கீல்கள் தொடுத்திருந்தனர். 

இப்போது ஆட்சி மாறியதால் காட்சிகள் மாறின. இம்ரான்கான் அரசின் அறிவுரைப்படிதான் அரசு தரப்பு வக்கீல்கள் இப்போது செயல்படுகிறார்கள்.

எனவே இந்த வழக்கில் இருந்து இம்ரான்கான் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படியே இந்த வழக்கில் இருந்து இம்ரான்கானை விடுவித்து நீதிபதி ராஜா அவாத் அப்பாஸ் ஹசன் நேற்று (29) உத்தரவிட்டார்.

அதே நேரத்தில் இந்த வழக்கில் பாகிஸ்தான் அமைச்சர்களான ஷா மக்மது குரேஷி, பெர்வேஸ் கட்டாக், சாப்கத் மெக்முத், ஆசாத் உமர் மற்றும் மாகாண அமைச்சர்களான அலீம் கான், சவுக்கத் யூசுப்ஜாய், பி.டி.ஐ. கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஜகாங்கீர் தரீன் ஆகியோர் மீதான விசாரணைகள் தொடரும்.

அவர்கள் அடுத்த விசாரணைக்கு நவம்பர் 12ஆம் திகதி ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம், அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad