யாழ். பல்கலையில் அமைக்கப்பட்ட நவீன ஆய்வு மையத் தொகுதியை திறக்க நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Sunday, October 18, 2020

யாழ். பல்கலையில் அமைக்கப்பட்ட நவீன ஆய்வு மையத் தொகுதியை திறக்க நடவடிக்கை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தில், ஜெய்க்கா செயற்றிட்டத்தின் கீழ் கல்வி அமைச்சினால் 2 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட விவசாய ஆய்வுகள் மற்றும் பயிற்சிக்கான ஆய்வுமையக் கட்டடத் தொகுதி எதிர்வரும் 31 ஆம் திகதி சனிக்கிழமை திறப்பு வழா காண இருக்கிறது.

கடந்த வருடம் இதன் கட்டட மற்றும் அமைப்பு வேலைகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டிருந்த போதிலும், திறப்பு விழா ஒழுங்கமைப்பில் காணப்பட்ட இழுபறி நிலையினால் மிக நீண்ட காலமாகப் பாவனைக்கு விடப்படாமல் இருந்து வந்தது.

2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட செயல் திட்டத்தின் கீழ் 1.6 பில்லியன் ஜப்பானிய ஜென் (இலங்கை ரூபாயில் 2.2 பில்லியன்) பெறுமதிக்கு கட்டடங்கள் மற்றும் ஆய்வு கூட உபகரணங்கள் மற்றும் நவீன விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டிருந்தன.

கட்டுமானப் பணிகள் கடந்த வருடம் நிறைவு பெற்ற பின்னரும், பாவனைக்கு விடாதமை குறித்துக் கவலையடைந்த ஜப்பானிய அரசாங்கம், அதனை விரைவில் திறந்து பாவனைக்கு விடுமாறு யாழ். பல்கலைக்கழகத் துணை வேந்தருக்கு அழுத்தம் கொடுத்ததை அடுத்து, இந்தக் கட்டடத் தொகுதியை எதிர்வரும் 31 ஆம் திகதி திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கட்டடத் தொகுதித் திறப்பு விழாவுக்கு கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இலங்கைக்கான ஜப்பானிய உயர்ஸ்தனிகர் அகிரா சுகியமா, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, கடற்றொழில், நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment