ஜனநாயகத்தை சர்வாதிகார பலி பீடத்தில் பலி கொடுத்து, தனி மனித சர்வாதிகாரத்தை மிகைப்படுத்தி, சர்வாதிகார ஆட்சியாளரை உருவாக்குவதே 20 ஆவது திருத்தத்தின் இலக்காகும் - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் - News View

About Us

About Us

Breaking

Friday, October 16, 2020

ஜனநாயகத்தை சர்வாதிகார பலி பீடத்தில் பலி கொடுத்து, தனி மனித சர்வாதிகாரத்தை மிகைப்படுத்தி, சர்வாதிகார ஆட்சியாளரை உருவாக்குவதே 20 ஆவது திருத்தத்தின் இலக்காகும் - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன்

பா.மோகனதாஸ்

ஜனநாயகத்தை சர்வாதிகார பலி பீடத்தில் பலி கொடுத்து, தனி மனித சர்வாதிகாரத்தை மிகைப்படுத்தி, சர்வாதிகார ஆட்சியாளரை உருவாக்குவதே 20 ஆவது திருத்தத்தின் இலக்காகும். அதன் மூலமாக அடக்கு ஒடுக்குமுறை ஆட்சியாளரின் பரிபாலன உத்திகளாக இருக்கும். அடங்கிக் கிடக்கும் அடிமை நிலைதான் மக்களின் பரிதாப நிலையாக அமையும். அதிலும் குறிப்பாக சிறுபான்மைத் தமிழ் பேசும் மக்களின் நிலைமை கைகட்டி வாய் பொத்தி வாழ வேண்டும் என்ற அடிமை சாசனத்திற்கான முன்னேற்பாடாக இது அமையப் போகிறது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், மேலும் தெரிவிக்கையில், இப்படியாக அமையப்போகும் ஆண்டான் - அடிமை முறைக்கு ஒப்பான சாசனத்திற்கு 5 சிறுபான்மை இனக்கட்சிகள் ஆதரவளிக்கப் போகின்றன என்பதுதான் வேதனையும், வெட்கக் கேடானதுமான விடயம்.

ஜனநாயகவாதிகள், முற்போக்குச் சிந்தனையாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், சிறுபான்மையினரின் பிரதிநிதி காப்பாளர்கள், தமிழ் உணர்வாளர்கள், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் குரலாளர்கள், சர்வதேச ஜனநாயக அவதானிகள் ஆகியோர் 20 ஆவது திருத்தத்திற்கெதிராக கடுமையான எதிர்ப்பையும் விமர்சனத்தையும் முன்வைத்து வருகின்றனர்.

தற்போது ஊடகங்களில் கசிந்துள்ள உயர் நீதிமன்றத் தீர்ப்பு கூட உண்மைகளைக் கோடிட்டுக் காட்டுகின்றன. இப்போதே இராணுவமயமாக்கல், நினைவுகூரலுக்குத் தடை, தொல்லியல் ஆணைக்குழு காணிகளைக் கையகப்படுத்தல், மட்டக்களப்பு எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் காடழிப்பு, சட்டவிரோத நில வேட்டை அபகரிப்புகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஜனநாயக வழியில் போராட்டத்தடை போன்ற செயல்கள் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன.

இப்போதே இப்படியென்றால் 20ஆவது திருத்தமும் வந்துவிடால் என்னவாகும்? நினைத்துப் பார்க்கவே முடியாது..! அதேவேளை, இப்படி பாதகமான 20 ஆம் திருத்தத்திற்கு ஆதரவாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, தமிழர் முற்போக்கு அமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய தமிழ் பேசும் கட்சிகள் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளன.

மட்டக்களப்பில் தொல்லியல் இடங்களைப் பாதுகாத்தல் போர்வையில் எல்லைப் பிரதேசக் காணி அபகரிப்புகள் பேரினமயமாக்கலுக்கான நகர்வுகளாகவுள்ளன. அண்மையில் மண்முனை மேற்கு வவுணதீவு செயலகத்திற்குட்பட்ட ஈச்சந்தீவுக் கிராமத்திற்கு சென்ற பிரதேச செயலக உதவி செயலாளர், கோமளம் என்கின்ற விதவையின் வீட்டுக்குச் சென்று அவரது வீட்டோடு கூடிய அவரது தனியார் காணி தொல்லியல் இடத்திற்குரியது என்றும் அதனை விரைவில் அளவிடுவார்கள் என்றும் கட்டியம் கூறிச் சென்றுள்ளார்.

இத்தனியார் காணி முப்பாட்டனுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து பரம்பரை பரம்பரையான உரிமத்திற்குரிய காணி என்பதை கிராம மக்கள் நன்கறிவார்கள். கிழக்கில் தமிழர்களின் இருப்பைப் பாதுகாப்போம் என்று தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுப் பதவிகளை அலங்கரிப்பவர்கள் எங்கேயென்று பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள், காணி உரிமையாளர்கள் தேடுகிறார்கள்.

போலிப்பேச்சுகள், கேலிக்கூத்துகள், குறுக்குவழி வெற்றிகள், பொறுப்பற்ற பதில்கள், வெறுப்புக்குரிய விளக்கங்களால் மக்களை ஏமாற்ற முடியாது. கண்களை மூடிக்கொண்டு அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகளுக்குக் கைகளைத் தூக்குவதற்கு மக்கள் வாக்களிக்கவில்லை. மக்களே விழியுங்கள். உங்களை மடையர்களாக்கி அவர்கள் மகுடம் சூட அனுமதிக்காதீர்கள்.

மக்களின் தேவை ஜனநாயக அதிகாரப் பரவலாக்கம், உரிமை, சுதந்திரம், சமத்துவம் போன்ற நேரிடை விடயங்களாகும். மாறாக அடக்கு ஒடுக்கு அராஜக அடாவடித்தனங்களோடு கூடிய சர்வாதிகாரத்தை மக்கள் விரும்பவே மாட்டார்கள். ஆயின் ஜனநாயகத்திற்கும் மக்களுக்கும் விரோதமான 20ஆவது திருத்தத்திற்கு சிறுபான்மை இனக்கட்சிகள் ஆதரவளிப்பதென்பது மக்களை மறந்த, சரணாகதி அரசியலாகவே இருக்க முடியும்.

உரிமையா சலுகையா, நியாயமா இலாபமா? என்ற தேர்வில் சலுகைகளுக்கும் சுய இலாபங்களுக்கும் பேரினவாதிகளிடம் விலை போகின்றவர்கள் ஒருபோதும் உண்மையான மக்கள் பிரதிநிதிகளாக இருக்க முடியாது என்றார்.

No comments:

Post a Comment