புதிய அரசியலமைப்பு குழுவிற்கு விரைவில் மலையக பிரதிநிதி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கள்ள மௌனம் காக்கவில்லை - மனோவிற்கு செந்தில் பதில் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 17, 2020

புதிய அரசியலமைப்பு குழுவிற்கு விரைவில் மலையக பிரதிநிதி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கள்ள மௌனம் காக்கவில்லை - மனோவிற்கு செந்தில் பதில்

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவில் மலையக மக்களின் பிரதிநிதி ஒருவரை உள்வாங்குவதற்கான சிபாரிசுகளை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளது. சில நடைமுறை சிக்கல்கள் காரணமாக காலதாமதம் ஏற்பட்டுள்ளதுடன், விரைவில் இதற்குச் சாதகமான பதிலொன்றை அரசாங்கம் வழங்குமென்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், புதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழு விவகாரத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கள்ள மௌனம் காப்பதாக கூறியுள்ளமை தொடர்பில் விளக்கமளித்து செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

அறிக்கையில் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாவது, இ.தொ.கா. கள்ள மௌனம் காப்பதாக மனோ கணேசன் கூறியுள்ள கருத்து தவறான புரிதலாகும். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் என்ற அடிப்படையில் அவருக்கும் அந்த செய்தியை வாசித்த மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டிய நிலையில் உள்ளோம்.

மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை கொண்டுள்ள பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் இ.தொ.கா. இரண்டு எம்.பிக்களை கொண்டுள்ளதுடன், மலையக மக்களின் அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தி வருகிறது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஸ்வரன் ஆகியோர் பாராளுமன்றம் மற்றும் அரசாங்கத்தின் ஊடாக மலையக மக்களுக்குத் தேவையான அனைத்து பணிகள் குறித்தும் கவனம் செலுத்துவது மட்டுமன்றி மலையக மக்களின் உரிமைகளை பாதுகாப்பதிலும் அவதானமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மறைவின் பின்னரும் இ.தொ.கா. கருத்து வேறுபாடுகளின்றி பிளவின்றி செயல்பட்டு வருகிறது. ஒரு தலைவர் இறந்த பின்னர் கட்சிகள் பிளவுபடுவதுதான் வழமையாகும். தலைவர் மறைந்த பின்னரும் இ.தொ.கா சக்தி வாய்ந்த அமைப்பாக பிளவுபடாது உள்ளதுடன் கட்சியிலுள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றோம்.

அரசியல் ரீதியாக சில முடிவுகள் வெளிப்படையாக எடுக்கும் சூழ்நிலை அமையும் என்பதுடன் சில முடிவுகளை காலம் சென்றே அமுல்படுத்த முடியும். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தை அனைத்து சந்தர்ப்பங்களிலும் காப்பாற்றிய பலமான அமைப்பாக இருந்தது. இரண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் ஒரு இராஜாங்க அமைச்சரையும் வைத்திருந்தது. 

அரசாங்கத்தை காப்பாற்றிய அமைப்பாக இருந்தாலும் பல விடயங்களில் மலையக மக்களுக்குத் தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதில் சிக்கல் நிலைமைகள் இருந்ததை அவர்களும் அறிவர். நாமும் அறிவோம். அப்படியான சூழலில் இன்று மலையக மக்களின் ஆதரவின்றி தனி பெரும்பான்மையை பெற்றிருக்கும் பொதுஜன பெரமுன அரசாங்கத்துடன், அவதானமாகவும் மலையக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய செயற்படும் ஓர் அமைப்பாகவும் இ.தொ.கா. பணியாற்றி வருகிறது.

தினகரன்

No comments:

Post a Comment