ஊடகவியலாளர் தரிஷா பஸ்டியன் விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை கடும் விசனம்! - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 15, 2020

ஊடகவியலாளர் தரிஷா பஸ்டியன் விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை கடும் விசனம்!

(நா.தனுஜா) 

ஊடகவியலாளர் தரிஷா பாஸ்டியனை இலக்கு வைத்து தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் அடக்குமுறை மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்கள் கடும் விசனமளிப்பதாகக் குறிப்பிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர்கள் ஐவர் இலங்கை அரசாங்கத்திற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்திருக்கிறார்கள். 

'சண்டே ஒப்சேவர்' பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியரும் 'நியூயோர்க் டைம்ஸ்' பத்திரிகையின் கொழும்பு செய்தியாளருமான தரிஷா பாஸ்டியனின் மடிக்கணினி குற்ற விசாரணைப் பிரிவினரால் கையப்படுத்தப்பட்டமை, அவரது தொலைபேசி உரையாடல் பதிவுகள் பகிரங்கப்படுத்தப்பட்டமை உள்ளடங்கலாக அவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டுவரும் அச்சுறுத்தல் நடவடிக்கைகள் தொடர்பில் விசனம் தெரிவித்து கருத்து வெளியிடும் சுதந்திரத்திற்கான உரிமையைப் பாதுகாத்தல் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் டேவிட் கயே, சட்டவிரோத அல்லது தன்னிச்சையான மரண தண்டனை நிறைவேற்றம் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் அக்னெஸ் கலமார்ட், அமைதியாக ஒன்றுகூடுதல் மற்றும் உரையாடும் சுதந்திரத்திற்கான உரிமை தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் க்ளெமென்ட் நியாலெற்சொஸி வோல், மனித உரிமை பாதுகாவலர்களின் நிலைவரம் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் மேரி லோலர் மற்றும் தனியுரிமைக்கான ஐ.நா விசேட அறிக்கையாளர் ஜோசப் கனரகி ஆகிய ஐவர் இணைந்து இலங்கை அரசாங்கத்திற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்திருக்கின்றனர். 

தரிஷா பத்திரிகையில் எழுதிய விடயங்கள் மற்றும் இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அவரது செயற்பாடுகள் ஆகியவற்றுக்காகவே அவர் இலக்கு வைக்கப்படுகிறார் என்று அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

தரிஷா பாஸ்டியனை இலக்கு வைத்து இடம்பெறும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் பெரும் விசனத்தைத் தோற்றுவித்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் ஐ.நா விசேட அறிக்கையாளர்கள், தரிஷாவின் மடிக்கணினி பொலிஸாரால் கையப்படுத்தப்பட்டமை மற்றும் அவரது தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவுகள் பகிரங்கப்படுத்தப்பட்டமை என்பன அவருக்குத் தகவல் வழங்கியவர்களுக்கு ஆபத்தை விளைவிப்பதுடன் சில சமயங்களின் அந்த சாட்சியங்களுடன் சமரசங்களை ஏற்படுத்திக் கொள்வதற்கும் வழி வகுக்கும் என்றும் இது ஏனைய ஊடகவியலாளர்கள் மனித உரிமைகள் மற்றும் மக்கள் நலன் தொடர்பான விடயங்கள் குறித்து எழுதுவதைத் தடுக்கும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். 

'தொழில் சார்ந்து தரிஷாவின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி, அவர் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் அரசியல் விவகாரங்கள் தொடர்பில் எழுதுவதில் தடையை ஏற்படுத்தும் நோக்கத்தில் இத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றதா என்பது குறித்தும் நாம் வெகுவாக அவதானம் செலுத்தியிருக்கிறோம்' என்றும் அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

தரிஷா ஊடகத் தொழிலில் ஈடுபட்ட கால கட்டத்தில் மனித உரிமைகள், சட்டவிரோதமான படுகொலைகள், இலங்கையில் இடம்பெற்ற போர், அரசியல் ஊழல் மோசடிகள், தண்டனைகளில் இருந்து தப்பித்தல், ஜனநாயகம் மற்றும் அரசியல் உரிமைகள் ஆகிய விடயங்கள் தொடர்பாகவே அதிகளவில் எழுதி வந்திருக்கிறார் என்று ஐ.நா விசேட அறிக்கையாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். 

அத்தோடு அரச சார்பு ஊடகங்கள் தரிஷா பாஸ்டியன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுத்து வந்ததுடன் அவரை ஒரு துரோகியாக அல்லது குற்றவாளியாக சித்தரிக்கும் பிரசாரம் சமூகவலைத்தளங்களின் ஊடாக மேற்கொள்ளப்பட்டது என்றும் விசேட அறிக்கையாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad