திலீபன் நினைவு கூரப்படுவது சிலரது சுயலாப அரசியலுக்காகவே, தனக்கு அத்தகைய தேவையில்லை என்கிறார் டக்ளஸ் - News View

Breaking

Post Top Ad

Monday, September 28, 2020

திலீபன் நினைவு கூரப்படுவது சிலரது சுயலாப அரசியலுக்காகவே, தனக்கு அத்தகைய தேவையில்லை என்கிறார் டக்ளஸ்

சுயலாப அரசியலுக்காகவே திலீபன் நினைவு கூரப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவ்வாறான தேவை தனக்கு இல்லையெனவும் தெரிவித்துள்ளார். 

தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே, ஈழ விடுலைப் போராட்ட இயக்கங்களின் ஆரம்ப கால உறுப்பினரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “திலீபனை நினைவு கூருவது தொடர்பாக தற்போது பேசி வருகின்ற அரசியல் தலைவர்கள் சுயநல அரசியல் நோக்கங்களுக்காக பேசுகின்றார்களே தவிர, எவரும் உளப்பூர்வமாக பேசவில்லை.

இந்த அரசியல் தலைவர்களை இது தொடர்பான பகிரங்க விவாத்திற்கு வருமாறு அழைக்கின்றேன். குறிப்பாக ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் போன்ற அமைப்புக்களை புலிகளின் தலைமை அழித்தபோது யாழ்ப்பாணத்தில் அதனை நேரடியாக திலீபன் வழிநடத்தியிருந்தார்.

அதேபோன்று, தமிழரசுக் கட்சித் தலைவர்களும் புலிகளின் தலைமையினால் அழிக்கப்பட்டிருக்கின்றார்கள். அதுமாத்திரமல்ல, தற்போது இந்த அமைப்புக்களின் தலைவர்களாக திலீபனை நினைவு கூர வேண்டுமென்று கையொப்பம் இட்டவர்களும் புலித் தலைவர்களின் கொலைப் பட்டியலில் இருந்தவர்கள்தான்.

இவ்வாறானவர்களினால் உளப்பூர்வமாக திலீபனை நினைவு கூர முடியாது. எனினும் காத்திரமான அரசியல் வேலைத் திட்டம் ஏதுமின்றி மக்கள் ஆதரவை இழந்துள்ள நிலையில் புலிகளின் ஆதரவாளர்களையாவது வளைத்துப் பிடித்து விடவேண்டும் என்ற நோக்கில் திலீபன் தொடர்பில் நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர்" என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad