மக்களின் இறையாண்மை தனிநபரிடம் வரையறுக்கப்படுகின்றமைக்கு நாங்கள் எதிரானவர்கள் - அகிலவிராஜ் - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 30, 2020

மக்களின் இறையாண்மை தனிநபரிடம் வரையறுக்கப்படுகின்றமைக்கு நாங்கள் எதிரானவர்கள் - அகிலவிராஜ்

மக்களின் இறையாண்மை தனிநபரிடம் வரையறுக்கப்படுகின்றமைக்கு நாங்கள் எதிரானவர்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைக்காக, நேற்று (செவ்வாய்க்கிழமை) நீதிமன்றத்திற்கு அவர் வருகை தந்திருந்தார்.இதன்போது ஊடகவியலாளர்களை சந்தித்த அகிலவிராஜ் காரியவசம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய தேசியக் கட்சி 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக 2 மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அந்த வகையில், நாங்கள் 20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை முழுமையாக எதிர்க்கின்றோம்.

மக்களின் இறையாண்மை தனிபர் ஒருவரிடம் வரையறுக்கப்படுகின்றமையே நாங்கள் முழுமையாக எதிர்க்கின்றோம். குறிப்பாக, சுயாதீன ஆணைக்குழுக்கள், கணக்காய்வு திணைக்களம் மற்றும் ஜனாதிபதியின் அதிகாரம் உள்ளிட்ட முக்கிய பல விடயங்களில் நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம்.

அதாவது, ஐக்கிய தேசிய கட்சி என்ற வகையில் குறித்த 20ஆவது திருத்தத்துக்கு எதிர்ப்பை தெரிவிப்பது மட்டுமன்றி அதற்காக நீதிமன்றம் செல்ல முடிவு செய்தோம். குறித்த 20ஆவது திருத்த சட்டமூலத்தை நாடாளுமன்றம் முழுமையாக ஒப்புக் கொண்டால், அது ஒரு பிரச்சினையாக இருக்காது.

ஆனால் பிரச்சனை என்னவென்றால், அரசாங்கம் 20ஆவது திருத்த சட்டமூலத்தை, வரைவாகக் கொண்டு வந்ததைப் பார்க்கும்போது, இந்த நாட்டின் சுதந்திரத்தையும் மக்களின் இறையாண்மையையும் மதிக்கும் எவருடனும் நாம் ஒருபோதும் உடன்பட முடியாதென தோன்றுகிறது.

ஜனாதிபதிக்கு மக்களின் இறையாண்மை வழங்கப்படவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad