பல நாட்களுக்கு பின் வெண்டிலேட்டர் உதவி இல்லாமல் சுவாசித்த ரஷிய எதிர்க்கட்சி தலைவர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 16, 2020

பல நாட்களுக்கு பின் வெண்டிலேட்டர் உதவி இல்லாமல் சுவாசித்த ரஷிய எதிர்க்கட்சி தலைவர்

நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷத்தால் பாதிக்கப்பட்டு ஜெர்மனியில் சிகிச்சை பெற்று வரும் ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் நவல்னி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் கூடிய விரைவில் நவல்னி மீண்டும் ரஷியா செல்ல திட்டமிட்டுள்ளார்.

ரஷியாவின் எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டு வருபவர் அலெக்ஸி நவல்னி. இவர் ஜனாதிபதி விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

இவர் கடந்த மாதம் 20 ஆம் திகதி ரஷியாவின் ஒம்சக் நகரில் இருந்து விமானம் மூலம் மாஸ்கோவிற்கு பயணம் மேற்கொண்டார். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் நவல்னிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 

இதனால் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் அவசர அவசரமாக ஒம்சக் நகரிலேயே மீண்டும் தரையிறக்கப்பட்டு நவல்னி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஒம்சக் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நவல்னியின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும் அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, நவல்னிக்கு கூடுதல் சிகிச்சையளிக்க ஜெர்மனி முன்வந்தது. உடனடியாக ரஷிய அரசின் அனுமதியுடன் நவல்னி ஒம்சக் நகரில் இருந்து ஜெர்மனி நாட்டிற்கு சிறப்பு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டார்.

பெர்லினில் வைத்து நவல்னிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷத்தன்மை உடைய நோவிசோக் என்ற வேதிப்பொருள் தாக்குதலுக்கு நவல்னி உள்ளாகியுள்ளதாக ஜெர்மனி மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். 

தொடர் சிகிச்சை காரணமாக கடந்த 8-ம் திகதி நவல்னி கோமா நிலையில் இருந்து மீண்டார். ஆனாலும், அவருக்கு செயற்கை சுவாசக்கருவி மூலமாகவே சுவாசித்து வந்தார். 

இந்நிலையில், நவல்னி வெண்டிலேட்டர் உதவியில்லாமல் தன்னிச்சையாக சுவாசிக்கும் அளவுக்கு அவரின் உடல்நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 

தனது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது தொடர்பாக சமூகவலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நவல்னி, ’ஹாய் நான் நவல்னி, உங்களை பிரிந்திருப்பது வருத்தமாக உள்ளது. எந்த ஒரு சுவாவசக்கருவி, ஒக்சிஜன் குழாய்களின் உதவி இல்லாமல் நேற்று முழுவதும் என்னால் சொந்தமாக சுவாசிக்க முடிந்தது’ என்றார்

இதற்கிடையில், சிகிச்சை நிறைவடைந்து உடல்நிலை நல்ல முன்னேற்றம் ஏற்பட்ட உடன் கூடிய விரைவில் ரஷியா வரவுள்ளதாக நவல்னியின் செய்தித்தொடர்பாளர் கீரா யார்மைஷ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment