பொதுஜன பெரமுனவிலுள்ள ஏனைய கட்சிகள் வாக்களிக்காவிட்டால் 20 ஐ நிறைவேற்ற முடியாது - மயந்த திஸாநாயக்க - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 16, 2020

பொதுஜன பெரமுனவிலுள்ள ஏனைய கட்சிகள் வாக்களிக்காவிட்டால் 20 ஐ நிறைவேற்ற முடியாது - மயந்த திஸாநாயக்க

(செ.தேன்மொழி) 

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பில் ஆளுந்தரப்பினருக்கிடையில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது என்ற தைரியத்தில் 20 ஐ கொண்டு வந்திருந்தாலும் பொதுஜன பெரமுனவிலுள்ள ஏனைய கட்சிகள் வாக்களிக்காவிட்டால் அதனை நிறைவேற்ற முடியாது என்பதை அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்தார். 

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், 20 ஆவது திருத்தத்தில் கணக்காய்வு ஆணைக்குழுவை நீக்கி சுமார் 120 நிறுவனங்கள் கணக்காய்விற்கு உட்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

ஸ்ரீலங்கன் எயாலைன்ஸ் விமான சேவை, லிட்ரோ கேஸ் நிறுவனம், காப்புறுதி நிறுவனம் என்பன இதில் உள்ளடங்குகின்றன. ஜனாதிபதி மற்றும் பிரதமருடைய அலுவலகங்கள் கூட கணக்காய்வு திணைக்களத்தின் கீழ் உள்ளடக்கப்படவில்லை. 

ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் கடந்துள்ள போதிலும் மத்திய வங்கி பிணை முறி மோசடியாளர்களையோ அல்லது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களையோ கைது செய்ய நடவடிக்கை எடுக்க முடியாமலுள்ளது. 

இவ்வாறான நிலையில் எவ்வகையான சவால்களுக்கும் முகங்கொடுத்து மக்களுக்காக போராட பிரதான எதிர்கட்சி என்ற ரீதியில் நாம் தயாராகவுள்ளோம். 

அரசாங்கத்திற்குள் 20 ஆவது திருத்தம் தொடர்பில் பாரிய முரண்பாடுகள் நிலவுகின்றன. மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கிறது என்ற தைரியத்தில் 20 ஐ கொண்டு வந்தாலும் ஏனைய கட்சிகள் அதற்கு ஆரவளிக்காவிட்டால் 20 ஐ நிறைவேற்ற முடியாமல் போகும் என்பததை நினைவில் கொள்ள வேண்டும். 

மனசாட்சியின் படி செயற்படும் ஐக்கிய மக்கள் சக்தியின் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் 20 ஐ ஆதரிக்க மாட்டார்கள் என்று நான் உறுதியளிக்கின்றேன். 

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்க முடியாது. மேலும் 26 வருடங்கள் அவரே தலைவராக இருப்பார். 

எவ்வாறிருப்பினும் கொள்கை அடிப்படையில் நாம் ஒன்றிணைந்தாலும் சஜித் பிரேமதாசவினுடைய தலைமைத்துவத்தின் கீழ் தான் தொடர்ச்சியான அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad