ஆறு மாதத்தில் புதிய அரசியலமைப்பு சட்டநகல் சபையில் சமர்ப்பிப்பு, எதிரணியின் ஆதரவுடன் 20 ஆவது திருத்தம் ஒக்டோபர் 12 இன் பின் நிறைவேறும் என்கிறார் ஜீ.எல்.பீரிஸ் - News View

About Us

About Us

Breaking

Monday, September 28, 2020

ஆறு மாதத்தில் புதிய அரசியலமைப்பு சட்டநகல் சபையில் சமர்ப்பிப்பு, எதிரணியின் ஆதரவுடன் 20 ஆவது திருத்தம் ஒக்டோபர் 12 இன் பின் நிறைவேறும் என்கிறார் ஜீ.எல்.பீரிஸ்

புதிய அரசியலமைப்புக்கான ஆரம்ப நகல் சட்ட வரைவு எதிர்வரும் 06 மாத காலத்தினுள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். 

இதற்கான பணிகளை நிபுணர் குழு ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், மட்டுப்படுத்தப்பட்ட நோக்கத்திற்காகவே 20 ஆவது திருத்தம் சமர்ப்பிக்கப்படுவதாக குறிப்பிட்டார்.

ஆகஸ்ட் 12 ஆம் திகதிக்கு முன்னர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைத்ததும் எதிரணியின் ஆதரவுடன் அதனை நிறைவேற்ற எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது, 20 ஆவது திருத்தம் குறித்து ஆராய ஜவரடங்கிய குழுவை பிரதம நீதியரசர் நியமித்துள்ளார். 

செப்டம்பர் 22 இல் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. எனவே ஒக்டோபர் 12 ற்கு முன்னர் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை அறிவிக்க வேண்டும். அதன் பின்னர் இரண்டாவது வாசிப்பிற்காக 20 ஆவது திருத்தம் சமர்ப்பிக்கப்படும். எமது கட்சி சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நல்லாட்சி காலத்தில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையிலான இழுபறி காரணமாக தாக்குதல் தொடர்பான தகவல் கிடைத்தும் நடவடிக்கை எடுக்கப்படாதது பற்றி உயிர்த்த ஞாயிறு ஜனாதிபதி ஆணைக்குழுவில் அம்பலமாகி வருகிறது. 19 ஆவது திருத்தத்தினால் அன்று ஏற்பட்ட குழப்ப நிலையை தொடர முடியாது. 

இன்று சகோதரர்கள் ஜனாதிபதி, மற்றும் பிரதமராக உள்ளனர். ஆனால் நீண்ட கால நோக்கிலே யாப்பு திருத்தம் செய்யப்படுகிறது. எதிர்க்கட்சியில் சிலரும் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவு வழங்க முன்வருவர். ஒக்டோபர் 12 இன் பின்னர் இதனை நிறைவேற்ற வாய்ப்புள்ளது.

எதிர்வரும் 06 மாத காலத்தினுள் புதிய அரசியலமைப்பிற்கான அடிப்படை சட்ட வரைவு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இதற்கான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவின் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு தனது பணிகளை ஆரம்பித்துள்ளது. அமைச்சரவையின் அனுமதியுடன் இக்குழு நியமிக்கப்பட்டது. அதன் பரிந்துரைகளுக்கு அமைவாக புதிய யாப்பிற்கான முன்னெடுப்பு இடம்பெறும்.

கடந்த ஆட்சியில் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு செயற்பட முடியவில்லை. நாட்டை நிர்வகிக்க 19 ஆவது திருத்தம் மாற்றப்பட வேண்டும். 42 வருடத்திற்கு முன்னர் ஜே.ஆர். ஆட்சியில் உருவாக்கிய யாப்பு இன்னும் தொடர்கிறது. இக்காலத்தில் பல கட்சிகள் ஆட்சி செய்தன.

20 ஆவது திருத்தம் அவசரப்பட்டு முன்வைக்கப்படவில்லை. ஜனாதிபதியினால் பாதுகாப்பு அமைச்சராக செயற்பட முடியாது. தவறு செய்த பொலிஸ் மா அதிபரை நீக்க முடியாது. 69 இலட்சம் மக்கள் இதனை மாற்றவே ஆணை வழங்கினர். நாட்டின் பாதுகாப்பிற்கு பாதுகாப்பு அமைச்சு பிரதானமானது. இந்த மாற்றங்களுக்கு 06 மாதம் காத்திருக்க தேவையில்லை. 

20 ஆவது திருத்தம் மட்டுப்படுத்தப்பட்ட நோக்கத்திற்காகவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தற்கால பிரச்சினைகளைத் தீர்க்க இந்த மாற்றம் அவசியம். 20 ஆவது திருத்தத்தில் புதிய விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை. 19 ஆவது திருத்தத்திற்கு முற்பட்ட நிலைமைக்கே மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

ஷம்ஸ் பாஹிம்

No comments:

Post a Comment