இந்தியாவின் 15 மில்லியன் டொலர்களுக்கும் அரசியலமைப்பிற்கும் எவ்வித தொடர்புமில்லை - News View

About Us

About Us

Breaking

Monday, September 28, 2020

இந்தியாவின் 15 மில்லியன் டொலர்களுக்கும் அரசியலமைப்பிற்கும் எவ்வித தொடர்புமில்லை

(நா.தனுஜா) 

இலங்கைக்கு 15 மில்லியன் டொலர் நிதியை வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளமைக்கும் அரசியலமைப்பிற்கும் இடையில் எவ்வித தொடர்புமில்லை. 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு உடன்பட்டமைக்குப் பதிலாகவே இந்தியாவினால் அந்த நிதி வழங்கப்படுவதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்று அரசாங்க பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். 

இலங்கை - இந்திய பிரதமர்களுக்கு இடையில் கடந்த சனிக்கிழமை இணையவழி மாநாடொன்று நடைபெற்றது. இதன்போது இரு நாடுகளினதும் அக்கறைக்குரிய பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன. 

எனினும் அது குறித்து வெளியான செய்திகளில் சில பரஸ்பர முரண்பாடுகள் இருப்பதாகக் குறிப்பிட்டு, அவை குறித்து தெளிவுபடுத்தும் நோக்கில் திங்கட்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இரு நாட்டுத் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடலின் போது பேசப்பட்ட பொருளாதார விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் மேலும் கூறியதாவது 

இந்தப் பேச்சுவார்த்தையின் போது எமது நாட்டின் வர்த்தகமீதி பற்றாக்குறை பிரச்சினை தொடர்பில் எடுத்துக் கூறியதுடன் எதிர்காலத்தில் இது குறித்து கவனம் செலுத்துவதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டது. அதேபோன்று ஏற்றுமதியை விடவும் பெருமளவான தொகைக்கு இந்தியாவிலிருந்து எமது நாடு பொருட்களை இறக்குமதி செய்வது பற்றியும் பேசப்பட்டது என்றார். 

இதன்போது, கருத்துவெளியிட்ட அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, பௌத்த மதத் தொடர்புகளை மேலும் விரிவுபடுத்துவதற்காக இந்தியா 15 மில்லியன் டொலர் நிதியை இலங்கைக்கு வழங்குவதாக அறிவித்திருக்கிறது. 

எனினும், அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் பட்சத்தில் அந்த நிதி வழங்கப்படும் என்று இரு நாடுகளுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன. அந்த செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. 

இந்தியா வழங்குவதற்குத் தீர்மானத்திருக்கும் 15 மில்லியன் டொலர்களுக்கும் அரசியலமைப்பிற்கும் எவ்வித தொடர்புமில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment