கொரோனா பரவலில் குழந்தைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன - ஆய்வில் கண்டுபிடிப்பு - News View

Breaking

Post Top Ad

Saturday, August 29, 2020

கொரோனா பரவலில் குழந்தைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன - ஆய்வில் கண்டுபிடிப்பு

Children play a key role in corona proliferation' - study findings || ' கொரோனா பரவலில் குழந்தைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன' - ஆய்வில் கண்டுபிடிப்பு
கொரோனா பரவலில் குழந்தைகள் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. இந்த வேகத்தை கட்டுப்படுத்தி மனித குலத்தை மீட்பதற்காக கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகளும், தடுப்பூசியும் உருவாக்குவதில் மருத்துவ நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இப்படி மருந்துகளுக்கான தேடல் ஒருபுறம் இருக்க, மறுபுறம் கொரோனா குறித்த ஆய்வுகளும் வேகமெடுத்து வருகின்றன. குறிப்பாக வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு, எந்த வயதினர் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்? எந்தெந்த நோயாளிகள் வைரசின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மாண்டு விடுகிறார்கள்? என்பது போன்ற ஆய்வுகள் உலகம் முழுவதும் தீவிரமாக நடக்கின்றன.

இந்த வரிசையில் கொரோனாவுக்கு குழந்தைகள் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார்கள்? அவர்களது உடலில் கொரோனாவின் வாழ்நாள் எவ்வளவு காலம்? அது ஏற்படுத்தும் அறிகுறிகள்? என்பது போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

குறிப்பாக தென்கொரியாவின் 22 மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 91 குழந்தைகளிடம் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 22 சதவீத குழந்தைகளுக்கு அறிகுறிகள் இல்லை. 20 சதவீதத்தினர் முதலில் அறிகுறி இல்லாமலும், பின்னர் அறிகுறி தென்பட்டவர்களும் ஆவர். மீதமுள்ள 58 சதவீதத்தினர் தொடக்கத்திலேயே அறிகுறி கொண்டவர்கள்.

சியோல் தேசிய மருத்துவப்பல்கலைக்கழகம், அமெரிக்காவின் தி ஜார்ஜ் வாஷிங்டன் மருத்துவ பல்கலைக்கழகம் போன்ற மருத்துவ நிறுவனங்களின் பேராசிரியர்கள் உள்ளிட்ட பல நிபுணர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வு முடிவுகள் ஜாமா குழந்தை மருத்துவ பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, குழந்தைகளின் உடலில் எவ்வளவு நாட்கள் கொரோனா வைரஸ் இருக்கிறது? என்பதை கண்டறிவதற்காக குழந்தைகள் அனைவருக்கும் சராசரியாக 3 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இதில் ஒட்டுமொத்த குழந்தைகளுக்கும் சராசரியாக 2½ வாரங்கள் வைரஸ் பாதிப்பு இருந்த நிலையில், அறிகுறியற்ற நோயாளர்களில் 5 இல் ஒரு பகுதியினருக்கும், அறிகுறியுள்ள நோயாளர்களில் பாதி பேருக்கும் 3 வாரங்களுக்கும் மேலாக வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

இதன்மூலம் கொரோனா தொற்றுக்கு ஆளான குழந்தைகள் பல வாரங்களுக்கு அறிகுறிகளுடன் இருக்க முடியும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

அதேநேரம் அறிகுறியற்ற குழந்தைகள் கூட தொடக்க கட்ட சோதனைக்குப்பிறகு நீண்ட நாட்களுக்கு வைரசின் கூடாரமாக இருந்துள்ளனர். இதனால் அவர்கள் நோய் பரப்பும் முக்கிய காரணிகளாக இருப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஜார்ஜ் வாஷிங்டன் மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் ராபர்ட்டா எல்.தெபியாசி உள்ளிட்ட நிபுணர்கள் கூறுகையில், ‘கொரோனா பரவலில் குழந்தைகள் முக்கிய பங்கு வகிக்கலாம். ஏனெனில் அறிகுறி இல்லாமலோ, அறிகுறிகள் அனைத்தும் குணமடைந்த பின்னரோ, குழந்தைகளிடம் எதிர்பார்க்காத வகையில் நீண்ட காலத்துக்கு வைரஸ் மரபணுக்கள் இருக்கின்றன’ என்று தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad