“அறுவைக்காட்டு பிரச்சினைக்கு ஜனாதிபதி நல்ல தீர்வைப் பெற்றுத் தருவாரென பெரிதும் நம்புகின்றோம்” - பாராளுமன்றில் அலி சப்ரி ரஹீம் எம்.பி தெரிவிப்பு! - News View

About Us

About Us

Breaking

Friday, August 28, 2020

“அறுவைக்காட்டு பிரச்சினைக்கு ஜனாதிபதி நல்ல தீர்வைப் பெற்றுத் தருவாரென பெரிதும் நம்புகின்றோம்” - பாராளுமன்றில் அலி சப்ரி ரஹீம் எம்.பி தெரிவிப்பு!

சிறுபான்மை சமூக விவகாரங்களில் அரசு மென்போக்கை கடைபிடிக்க வேண்டும்” - அலி  சப்ரி ரஹீம் எம்.பி தெரிவிப்பு! - News View
இடைக்கால கணக்கறிக்கையினை பிரதமர் நேற்று இந்த சபையில் சமர்ப்பித்ததன் பின்னர், இன்றைய தினத்தில் நான் உரையாற்றுவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். ஏனெனில், இந்த நாட்டின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கான கொடுப்பனவுகள் தடைப்பட்டுள்ள நிலையில், நான் பிரதிநிதித்துவப்படுத்தும் புத்தளம் மாவட்டமும் இதற்குள் உள்ளடங்கியுள்ளது என்பதை இந்த சபையில் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன் என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்தார்.

பாராளுமன்றில் இன்று (28) உரையாற்றிய அவர் கூறியதாவது, புத்தளம் மாவட்டம் அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தது போல் இயற்கை அழகையும் கொண்டது. விவசாயம், கைத்தொழில் மற்றும் மீன்பிடித் துறைகள் எமது மக்களின் தொழில். சூழல் மாசடையும் பிரதான நகரமாகவும் இது மாற்றப்பட்டு வருவதை இந்த சபையின் கவனத்துக்குக் கொண்டுவருகின்றேன். குறிப்பாக, நுரைச்சோலை அனல் மின்சார நிலையத்தின் மூலம் கடலும் அதே போன்று, விவசாய நிலங்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதை இங்கு நினைவுபடுத்துகின்றேன்.

நுரைச்சோலை அனல் மின்சார நிலையத்தினால் அப்பிரதேச பூமிகள் செழிப்பற்று காணப்படுகின்றன. விவசாயிகளின் உற்பத்திகளும், விளைச்சல்களும் குறைவடைந்துள்ளன. கொரோனா காலத்தில் ஏற்படுத்தப்பட்ட நாட்டின் நலன் கருதி, சுகாதார பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக விவசாயிகள், தமது உற்பத்திகளை சந்தைப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனை நான் நேரில் சென்று பார்வையிட்டேன்.

இன்று நாட்டின் நிலைமையினை அரசாங்கம் வழமைக்கு கொண்டுவந்துள்ளது. மீண்டும் விவசாயிகள் தமது வாழ்வாதாரத்துக்கும், நாட்டுக்கும் தேவையான உற்பத்திகளை கொண்டுவருவதற்கு முயற்சிக்கின்றனர். இருந்த போதும், இந்த விவசாயிகளுக்கு தேவையான பசளைகள் இன்மையால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைப் பெற்றுக்கொடுக்க எமது ஜனாதிபதி வாக்குறுதியளித்ததற்கமைய, தற்போதைய விவசாய அமைச்சர் கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே இதனை உடனடியாக பெற்றுக்கொடுப்பார் என நம்புகின்றேன்.

அத்துடன், அனல் மின்சாரம் அமைக்கப்பட்ட எமது பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு, மின்சாரத்தினை நியாயமான விலையில் வழங்கும் விசேட திட்டம் ஒன்றினையும் நடைமுறைப்படுத்துவது தொடர்பில், அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் மின்சார அமைச்சர் மஹிந்த அமரவீரவை கேட்டுக்கொள்கின்றேன்.

அதே போன்று, எமது மாவட்டத்தின் பாரிய பிரச்சினையான அறுவைக்காட்டு குப்பை பிரச்சினை தொடர்பில், கடந்த ஆட்சிக்காலத்தில் அதனை தடுத்து நிறுத்த பல போராட்டங்களை எமது மக்களும், நாமும் மேற்கொண்டோம். ஆனால், அதற்கான தீர்வு வழங்கப்படவில்லை. தற்போதைய ஜனாதிபதி இதனை நிறுத்துவதாகவும், சூழலும், மக்களும் பாதிக்கப்படாத, திட்டமிடப்பட்ட முறையில் இதனை செய்வதாக வாக்குறுதியளித்தார். இதனை அவர் நிறைவேற்றுவார் என நம்புகின்றோம்.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களை பார்க்கின்ற போது, ஒற்றுமையினையும், சமாதானத்தினையும், இன ஐக்கியத்தையும் உருவாக்கும் பல்துறை விற்பன்னர்கள் இருப்பதை அடையாளப்படுத்த முடிகின்றது. இன்று எமது நாட்டுக்கு தேவையானது இனங்களை ஒரே பார்வையில் பார்க்கும் செயற்பாடுகளே. இது இல்லாத பட்சத்தில் நாம் பாரிய அபிவிருத்திகளை ஏற்படுத்தினாலும், அது வெறும் மாயையாகவே இருக்குமே தவிர, நீடித்து, நிலைத்து நிற்கும் அபிவிருத்தியினை தோற்றுவிக்காது என்பது எனது கருத்தாகும்.

நான் பாராளுமன்றத்துக்கு தெரிவாகுவதற்கு முன்னர் பௌத்த, கத்தோலிக்க, முஸ்லிம், இந்து ஆகிய மதங்களின் முதல் எழுத்தக்களை கொண்ட BCMH அமைப்பொன்றை, 2005 ஆம் ஆண்டு, புத்தளம் மாவட்டத்தின் முன்னாள் அமைச்சர் காலஞ்சென்ற த.மு.தசநாயக்கவின் தலைமையில் ஏற்படுத்தியதுடன், அவரது பாசறையில் எனது சமூக சேவைப் பணிகளையும் முன்னெடுத்தேன். இந்த ஒற்றுமையானது புத்தளம் மாவட்டம் போன்ற பல்லின சமூகங்கள் வாழும் பிரதேசங்களுக்கு பெரும் நன்மையளித்துள்ளதை அனுபவ ரீதியில் கண்டவன் என்பதால், இந்த சபையில் இருக்கும் சபாநாயகர் முதல் சக பாராளுமன்ற உறுப்பினர்கள் வரை, எல்லோரும் தங்களது அனுபவங்களை எமக்கு வழங்குவது மிகப் பொருத்தமாகும்.

இந்த நாட்டின் வரலாற்றில் இஸ்லாமியர்கள் ஆயிரம் வருட வரலாற்றைக் கொண்டவர்கள். எல்லா சந்தர்ப்பங்களிலும் தாங்கள் வாழும் இந்த நாட்டின் பொதுவான அனைத்து சட்டங்களையும் மதித்தும், கட்டுப்பட்டும் வாழ்ந்து வந்தவர்கள். நாட்டின் சுதந்திரத்திற்கு முஸ்லிம் தலைவர்கள் தமது பங்களிப்பினை வழங்கியதை, இந்த சபையில் உரையற்றும் பலர் சுட்டிக்காட்டியுள்ளதை எண்ணி பெருமைப்படுகின்றேன். இருந்த போதும் பாரம்பரிய முஸ்லிம்களாகிய எமது மதக் கடமைகள், எமது கௌரவங்கள், கலாசார விழுமியங்களை பேணி செயற்படுவதற்கான உரிமையினை அரசியலமைப்பு வழங்கியுள்ளது. சில சந்தர்ப்பங்களில் அவைகள் மீறப்படுவதையும் காணுகின்றோம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் எமது சமூகத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

சகல மதங்களிலும் அடிப்படைவாத மித மிஞ்சிய கொள்கைகளை கொண்டவர்கள் இருக்கின்றார்கள் என்பதை நாம் அறிகின்றோம். இதனால் சமூக கட்டமைப்பு பாதிக்கப்படும் சந்தர்ப்பங்களை கண்டோம். இனிமேலும் இதற்கு நாம் இடமளிக்கக் கூடாது. இந்த சக்திகளை தோற்கடித்து எமது ஒற்றுமையினை வலுப்படுத்த வேண்டுமெனில், பரஸ்பர, சந்தேகமற்ற, தூய சிந்தனைகளுடன் புரிந்துணர்வை ஏற்படுத்தி, நல்லதொரு சமூகத்தினை ஏற்படுத்த நாம் அனைவரும் தியாகங்களுடன் செயற்பட வேண்டிய காலத்தில் இருக்கின்றோம் என அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment