கடற்படை முகாமுக்கு காணி சுவீகரிப்பதாக கூறி மக்கள் போராட்டம் - News View

Breaking

Post Top Ad

Friday, August 28, 2020

கடற்படை முகாமுக்கு காணி சுவீகரிப்பதாக கூறி மக்கள் போராட்டம்

யாழ்ப்பாணம் - மண்டைதீவிலுள்ள கடற்படை முகாமிற்கு மேலதிகமாக தனியார் காணிகளை சுவீகரிக்க நில அளவைத் திணைக்களத்தினால் இன்று (வெள்ளிக்கிழமை) காணிகளை அளவிடுவதற்கு வருகை தந்தபோது அப்பகுதி மக்கள் ஒன்றுகூடி எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதனை அடுத்து இன்றைய நில அளவையை நிறுத்திவிட்டு அவர்கள் திரும்பிச் சென்றுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, “மண்டைதீவு தெற்கு கடற்கரை வீதியிலுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான தனியார் காணிகளை, கடற்படையின் முகாம் விஸ்தரிப்புக்காக நில அளவை செய்ய திணைக்களத்தினர் இன்று வந்திருந்தனர்.

வேலணை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மண்டைதீவு கிராம சேவகர் பிரிவான ஜே/08 பகுதியில் அமைந்துள்ள தெற்கு கடற்கரை சுடலை வீதியிலுள்ள நான்கு பேருக்கு சொந்தமான 62 பரப்பு தனியார் காணியை கடற்படையினர் தமது முகாமை விஸ்தரிப்பிற்காக சுவிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இதற்காக இன்று நிலஅளவைத் திணைக்களத்தினர் ஊடாக காணி அளவீடு செய்வதற்கு ஏற்பாடுகள் செய்திருந்தனர். இதற்கு அப்பகுதி மக்களும் அரசியல் பிரமுகர்களும் ஒன்றுகூடி தமது எதிர்ப்பினை வெளியிட்டனர். அத்துடன் தங்களின் ஆட்சேபனையை தெரிவித்து எழுத்து மூலமான கடிதத்தினையும் வழங்கியிருந்தனர்.

இதனை அடுத்து நில அளவை திணைக்களத்தினர் நிலங்களை அளப்பதை கைவிட்டு விட்டு சென்றனர். மேலும் மக்களின் எதிர்ப்புப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலைமை காணப்பட்டது.

குறித்த பகுதியில் ஏராளமான பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் கடற்படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை புலனாய்வாளர்கள் தமது கையடக்க தொலைபேசிகள் ஊடாக காணொளி மற்றும் புகைப்படங்களை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment

Post Bottom Ad