எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை தொடர்ந்தும் தொலைபேசி சின்னத்தின் ஊடாகவே முன்னெடுக்க இருக்கின்றோம் - சஜித் பிரேமதாச - News View

Breaking

Post Top Ad

Saturday, August 8, 2020

எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை தொடர்ந்தும் தொலைபேசி சின்னத்தின் ஊடாகவே முன்னெடுக்க இருக்கின்றோம் - சஜித் பிரேமதாச

ஐக்கிய தேசிய கட்சியின் ...
(செ.தேன்மொழி)

ஐக்கிய மக்கள் சக்திக்கு மக்கள் தெளிவான ஆணையை அளித்துள்ளனர். எனவே எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை தொடர்ந்தும் தொலைபேசி சின்னத்தின் ஊடாகவே முன்னெடுக்க இருக்கின்றோம். ஐக்கிய தேசிய கட்சி உட்பட எந்தவொரு தரப்பானாலும் எமது கொள்கைகளை ஏற்றுக் கொண்டு இணைந்து செயற்பட வருவதாக இருந்தால் அதற்கு வெளிப்படை தன்மையுடன் வாய்ப்பளிக்க தயாராகவே உள்ளோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் அமனுமதியுடனே ஐக்கிய மக்கள் சக்தி ஸ்தாபிக்கப்பட்டிருந்தாலும், தேர்தல் நெறுங்கிய தருணத்தில் அவர்கள் எடுத்த தீர்மானத்தின் பலாபலனையே தற்போது அனுபவிக்கின்றார்கள். தொடர்ந்தும் அவர்கள் தொடர்பில் பேசுவதற்கு நான் விரும்பவில்லை. 

ஐக்கிய மக்கள் சக்திக்கு மக்கள் தெளிவான ஆணையை பெற்றுக் கொடுத்துள்ளனர். இந்நிலையில் தொலைபேசி சின்னத்தில் எமது எதிர்கால செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லவே நாங்கள் விரும்புகின்றோம்.

எமது கட்சிக்கு என்றே தனிப்பட்ட கொள்கைத்திட்டமொன்று இருக்கின்றது. அதற்கமைய நாட்டு மக்கள் எம்மை மாற்று அரசியல் கட்சியாக தெரிவு செய்துள்ளனர். மக்களது ஆணைக்கு மதிப்பளிப்பதுடன், அவர்களது நலனை பெற்றுக் கொடுப்பதற்கும் நாங்கள் முயற்சிக்க வேண்டும். 

எம்மிடம் ஏனைய கட்சிகளைப்போன்று தேர்தல் பிரசாரங்களுக்காக செலவிடுவதற்கு பணப்பலம் இல்லாத போதிலும், நாட்டின் ஜனநாயக கொள்கையை பாதுகாப்பதற்காக மக்கள் எமக்கு ஆணையை பெற்றுக் கொடுத்துள்ளனர். மக்களது எண்ணத்தை நிறைவேற்றுவதுடன், வரலாற்று சிறப்பு மிக்க ஒரு பலம் பொருந்திய கட்சியாக முன்னேரிச் செல்வதே எமது நோக்கமாகும்.

தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது ஊடகங்கள் எமக்கு கொடுத்திருந்த இடத்தை அனைவரும் அறிவீர்கள். இந்நிலையில் அனைவருக்கும் சம இடத்தை பெற்றுக் கொடுத்து செயற்படுமாறு ஊடகங்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம். 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பொறுப்பு தொடர்பில் எமக்கு அக்கறையில்லை. தொலைபேசி சின்னம்தான் எங்களது சின்னம். எமக்கென்று தனிப்பட்ட கொள்கைத்திட்டம் இருக்கின்றது. தொலைபேசி சின்னத்திற்கும், எமது தனித்துவம்மிக்க கொள்கை திட்டத்திற்குமே மக்கள் ஆணையை பெற்றுக் கொடுத்துள்ளனர். இதனால் சிறிகொத்தாவின் பொறுப்பையோ, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தையோ பொறுப்பேற்க நான் விரும்பவில்லை. 

ஐக்கிய மக்கள் சக்தியே தற்போது மக்கள் தெரிவுசெய்துள்ள மாற்று கட்சி. அதனால், கட்சியின் கொள்கைக்கு மதிப்பளித்து செயற்படுபவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியாக இருந்தாலும் சரி, வேறு எந்த தரப்பினராக இருந்தாலும் சரி அவர்கள் எம்முடன் இணைந்து செயற்பட விரும்பினால் அதற்கு வெளிப்படை தன்மையுடன் வாய்ப்பளிக்க தயாராகவே உள்ளோம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad