ஐக்கிய சமாதானக் கூட்டமைபிற்கு வழங்கும் ஆதரவினை மீள் பரிசீலனை செய்யுமாறு முன்னாள் அமைச்சர் சுபைர் அப்துர் ரவூப் மௌலவிக்கு பகிரங்கக் கடிதம் - News View

About Us

About Us

Breaking

Saturday, August 1, 2020

ஐக்கிய சமாதானக் கூட்டமைபிற்கு வழங்கும் ஆதரவினை மீள் பரிசீலனை செய்யுமாறு முன்னாள் அமைச்சர் சுபைர் அப்துர் ரவூப் மௌலவிக்கு பகிரங்கக் கடிதம்

Image may contain: 2 people, text that says "ஐக்கிய சமாதானக் கூட்டமைப்புக்கு வழங்கும் ஆதரவினை மீள் பரிச்லனை செய்யுங்கள் முன்னாள் அமைச்சர் சுபைர் அப்துர் ரவூப் மௌலவிக்கு கடிதம்"
கன்னியமிக்க மௌலவி. அல்ஹாஜ் ஏ.அப்துர் ரவூப் அவர்களுக்கு

பாராளுமன்றத் தேர்தல் - 2020 ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு கட்சிக்கு வழங்கும் ஆதரவினை மீள்பரிசீலனை செய்தல் தொடர்பாக,

கன்னியமிக்க மௌலவி அவர்களே,

மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் சமூகத்தினுடைய அரசியல் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்கும், சிறந்ததொரு அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்கும் பல வருடகாலமாக பாரிய பங்களிப்புக்களை செய்து வருகின்றீர்கள். அந்தவகையில் பாராளுமன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் மற்றும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் என பலரது வெற்றியிலும் உங்களது உழைப்பும், அர்ப்பணிப்பும் மிகப்பிரதானமானது.

அந்தவகையில் கடந்த மாகாண சபைத் தேர்தல்களிலும், பாராளுமன்ற தேர்தலிலும் நான் போட்டியிட்டிருந்த போதும் இரண்டு முறை மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்று, கிழக்கு மாகாண மக்களின் குரலாகவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை செய்து எமது சமூகத்தின் நலன் குறித்தும் அக்கரையாய் செயற்பட்டேன். எனது வெற்றியிலும் உங்களது அர்ப்பணிப்புக்கள் தியாகங்கள் நிறைந்திருப்பதனை நான் ஒருபோதும்; மறவேன். அந்தவகையில் உங்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் மக்களினது பாதுகாப்பு, இன நல்லுறவு, அரசியல் அதிகாரம் போன்றவற்றில் அக்கரையாக செயற்படும் நீங்கள், எதிர்வரும் ஆகஸ்ட் #5ஆம் திகதி நடைபெறப்போகின்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு கட்சிக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அறிகின்றேன். உங்களுடைய ஆதரவு குறித்து அக்கட்சியினரின் பிரச்சாரக்கூட்டங்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக பேசப்படுவதனை அவதானித்தேன்.

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு கட்சிக்கு இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆசனம் கிடைப்பதென்பது பகல் கனவாகும். குறித்த மாவட்டத்தில் சொற்ப வாக்குகளைக் கொண்டுள்ள நாம் பல கூறுகளாக பிரிந்து செயற்படுவதனால் சில வேளை முஸ்லிம் பிரதிநிதித்துவத்தினை இழக்கவும் கூடும். இந்தத் தேர்தலில் தமிழ் சமூகம் தங்களது பிரதிநிதித்துவங்களை தக்க வைப்பதற்காக பல்வேறு வியூகங்களை வகுத்து செயற்படுவதனையும் நாமறிவோம். இவ்வாறான சூழ்நிலையில், இந்த பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் பலர் போட்டியிட்டாலும், மரச்சின்னத்திலே போட்டியிடுகின்றவர்களுக்கே வெற்றிபெறும் வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் நான் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் அங்கம் வகித்திருக்கின்ற போதும், முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்காக கட்சிபேதங்களை களைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றேன். இவ்வரலாற்றுக் காலத்தில் உங்களது முடிவினையும் மீள் பரிசீலனை செய்வது காலத்தின் தேவையாகும்.

நான் கடந்த காலங்களில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவோடு இணைந்து எனது அரசியல் பயணத்தினை மேற்கொண்டேன். அவருடைய அரசியல் தீர்மானங்களும், செயற்பாடுகளும் முஸ்லிம் சமூகத்திற்கு ஆபத்தாய் அமைந்திருந்தது. அவரது அரசியல் நடவடிக்கைகளினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் தமிழ், முஸ்லிம் உறவில் பாரிய விரிசல் ஏற்பட்டது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா தனித்துப் போட்டியிடப் போவதாக கூறினார். அப்போது அந்த முடிவு பிழை என்றும், அதனை மீள்பரிசீலனை செய்யுமாறும் கோரினேன்.

சஹ்ரான் என்கின்ற கொடியவன் மேற்கொண்ட நாசகார செயலினால் முஸ்லிம் சமூகம் பல்வேறு துன்பங்களை எதிர்கொண்டு, சிக்கித் தவிக்கும் நிலையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டாம் என அவரின் கால்களைப் பிடித்துக் கேட்டேன். எதனையுமே அவர் செவிசாய்க்கவில்லை. தேர்தலில் குதித்தார் மிகவும் குறுகிய வாக்குகளைப் பெற்று இறுதியில் வெட்கித் தலைகுனிந்தார். அவரது செயற்பாட்டினால் இன்று முஸ்லிம் சமூகம் நடுவீதியில் நிற்கின்ற நிலைமைகள் ஏற்பட்டுள்ளது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஹிஸ்புல்லா ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் போட்டியிட்டு, தோல்வியுற்ற போதும், அக்கட்சி அவருக்கு தேசியப்பட்டியல் ஆசனத்தினை வழங்கி அமைச்சு மற்றும் ஆளுநர் பதவிகளையும் வழங்கியது.

ஆனாலும் அவர் அக்கட்சிக்கு துரோகமிழைத்துவிட்டு, ஜனாதிபதி தேர்தலில் தனித்து போட்டியிட்டார். அதனால் அவருக்கு பிரதான அரசியல் கட்சிகள் எதுவும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை. அதனாலே செய்வதறியாது மக்கள் செல்வாக்கற்ற புதிய கட்சி ஒன்றினூடாக பசீர் சேகுதாவூத்துடன் கூட்டுச் சேர்ந்துகொண்டு இம்முறை தேர்தலில் குதித்துள்ளார். அவர்கள் வெற்றிபெறுவதற்கு எவ்வித வாய்ப்புக்களுமில்லை.

தேசிய அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்ட இந்த சுயநல அரசியல்வாதிகளினால் முஸ்லிம் சமூகத்திற்கு ஒருபோதும் நன்மை கிடையாது என்பது உலகறிந்த உண்மையாகும். குறிப்பாக பசீர் சேகுதாவூத் மற்றும் ஹிஸ்புல்லா போன்றோர் கடந்த காலங்களில் அமைச்சர்களாக இருந்த போது மட்டு. மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்களுடைய நில, புலங்களை பாதுகாக்கவுமில்லை, பறிபோன எமது மக்களின் இடங்களை மீட்கவுமில்லை. முஸ்லிம் சமூகத்தினுடைய எந்தவொரு பிரச்சினைகளைத் தீர்க்கவுமில்லை. அவர்களினுடைய சுயநல அரசியல் போக்கினால் இன்று மக்கள் செல்வாக்கிழந்துள்ளனர். பசீர் சேகுதாவூத் பிரதிநிதித்துவ அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாக முன்னர் அறிவித்திருந்த போதும், அவர் இன்று தேர்தலில் குதித்துள்ளார்.

அதுமாத்திரமல்ல, ஹிஸ்புல்லாவினுடைய அரசியல் செயற்பாடுகள் சமூகங்களுக்கிடையே விரிசலை ஏற்படுத்தி, இனவாதிகள் ஒன்றினைவதற்கும் கால்கோளாக அமைந்தது. குறிப்பாக, வாக்குகளுக்காக இஸ்லாமிய கொள்கை ரீதியான இயக்கங்கள் முட்டி மோதிக்கொள்வதற்கும், நமது மக்கள் பாரம்பரியமாக கடைப்பிடித்து வந்த, இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிராக, வெளிநாட்டு பணங்களைக் கொண்டு வந்து, முஸ்லிம் சமூகத்தினை கூறுபோடுகின்ற பணிகளை அவர் மேற்கொண்டதனையும் நீங்கள் நன்கறிவீர்கள். அண்மையிலே ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியம் அளிக்கச் சென்ற போது, இது பௌத்த நாடு என்று குறிப்பிட்டதற்காக, முஸ்லிம் மக்கள் என்னை தாக்கினர் எனக்கூறிய அவரின் வீடியோ காணொளிகளையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள் என நினைக்கின்றேன்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினுடைய ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரபுடைய பாசறையில் வளர்க்கப்பட்டவர்கள் என்றும் அரசியல் அனுபவமும், முதிர்ச்சியும் கொண்டவர்கள் என்றும் மார்தட்டிப் பேசுகின்ற இவர்கள், தொடர்தேர்ச்சியாக சுயநல அரசியலையே செய்து வருகின்றனர். அதனால் அவர்கள் மாத்திரமே வெற்றிபெறுகின்றனர். இந்த சமூகம் தோல்வியடைகின்றது. இந்த யதார்த்தத்தினை மக்கள் இன்று புரிந்துள்ளனர்.

எனவே, மட்டு, மாவட்டத்திலே முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்கின்ற இவர்களின் அஜந்தாக்களுக்கு துணைபோகாது, குறித்த சுயநல அரசியல்வாதிகளுக்கு வழங்குகின்ற தங்களுடைய ஆதரவினை மீள்பரிசீலனை செய்து, சரியானதொரு முடிவினை மேற்கொள்ளுமாறு தங்களை வினயமாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

No comments:

Post a Comment