வீர வசனங்களை நிறுத்திவிட்டு விமோசனத்திற்காக பாடுபடுங்கள் - தமிழ்த் தலைமைகளுக்கு பாபுசர்மா வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Saturday, August 29, 2020

வீர வசனங்களை நிறுத்திவிட்டு விமோசனத்திற்காக பாடுபடுங்கள் - தமிழ்த் தலைமைகளுக்கு பாபுசர்மா வேண்டுகோள்

பாராளுமன்ற உறுப்பினர் சீ.வி. விக்னேஸ்வரன் தமிழர் பூர்வீகம் குறித்து தனது பாராளுமன்ற கன்னி உரையில் தெரிவித்த கருத்துக்கள் தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும் நாட்டில் சமாதானம், சுபிட்சம், தமிழ் மக்களுக்கு விமோசனம் என்பன கூடிவரும் இந்த நேரத்தில் இத்தகைய உரைகள் அவசியமா? எனும் கேள்வி நாட்டின் சுபிட்சமான எதிர்காலத்தை விரும்பும் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதென சிவஸ்ரீ (பாபு சர்மா) இராமச்சந்திர குருக்கள் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரது தலைமையில் மிக நீண்ட காலத்திற்குப் பிறகு நாட்டிற்கு சிறந்ததொரு தலைமைத்துவம் கிடைத்துள்ளது. இந்த அரிய சந்தர்ப்பத்தை அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளுக்கும் அதனை தொடர்ந்து வரும் பல ஆண்டுகளுக்கும் தமிழ் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

நாங்கள் கடந்த 30 வருட கால யுத்தத்தில் சந்தித்த அவலங்களுக்கு இவர்களுடைய ஆட்சிக் காலத்தில் நல்லதொரு தீர்வை பெற்றுக் கொள்ள வேண்டும். கடந்த ஐந்து வருட கால நல்லாட்சியில் தமிழ் தலைமைகள் விக்னேஸ்வரன் ஐயா, சம்மந்தன் ஐயா மற்றும் சுமந்திரன் உட்பட விட்ட தவறுகளை இனியும் தமிழ் தலைமைகள் விட்டுவிடக்கூடாது. 

தற்போது ஆளும் தரப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதேபோன்று பாராளுமன்ற பிரதி குழுக்களின் தவிசாளர் அங்கஜன் இராமநாதன் உட்பட பல தமிழ் தலைவர்கள் அரசாங்கத்தில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்கள். 

கடந்த ஐந்து வருட நல்லாட்சியில் உங்களால் செய்ய முடியாத விடயங்களை அடுத்து வரும் ஐந்து வருட காலத்தினுள் இன்று ஆளும் கட்சியில் உள்ள தலைவர்கள் நிச்சயம் செய்வார்கள். எனவே அவர்களுக்கு வழியை விட்டு அவர்கள் செய்யும் நற்செயல்களுக்கு உங்களது உரைகளும் அறிக்கைகளும் விமர்சனங்களும் பாதிப்பை ஏற்படுத்தாது ஒதுங்கி நின்று வழிவிட்டு கைகட்டி நடப்பதை மட்டும் பார்த்துக் கொள்ளுமாறு மிகவும் தாழ்மையாக கேட்டுக் கொள்வதாகவும் சிவஸ்ரீ பாபு சர்மா இராமச்சந்திர குருக்கள் தெரிவித்துள்ளார். 

குறிப்பாக வடக்கில் இருக்கின்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அங்குள்ள பிராந்திய பத்திரிகைகள் பலவற்றில் வீர வசனங்களை அள்ளி வீசி வருகிறார்கள். கடந்த 13 வருட காலமாக இதுதான் நடைபெற்று வருகிறது. இதுவே அவர்கள் தமது அரசியல் இருப்புக்கான ஆயுதமாக மிக நீண்ட காலமாக பயன்படுத்தி வருகிறார்கள். 

தயவுசெய்து இதனை நிறுத்தி நாட்டின் சுபிட்சமான எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசாங்கம் செய்யும் அபிவிருத்திகளை மக்களுக்கு கிடைக்கவிடாமல் செய்யாது ஒதுங்கி நிற்குமாறு பணிவுடன் கேட்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment