4 இலட்சம் பேரின் தொழில் இல்லாமலாக்கப்பட்டிருக்கின்றது இவர்கள் தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - எதிர்க்கட்சி தலைவர் - News View

About Us

About Us

Breaking

Friday, August 28, 2020

4 இலட்சம் பேரின் தொழில் இல்லாமலாக்கப்பட்டிருக்கின்றது இவர்கள் தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - எதிர்க்கட்சி தலைவர்

நானே இதற்குக் காரணம்! நாடாளுமன்றத்தில் சீற்றம் கொண்ட சஜித் - Ibctamil
(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

அரசாங்கம் ஒரு இலட்சத்தி ஐம்பதாயிரம் பேருக்கு தொழில் வழங்கும்போது 4 இலட்சம் பேரின் தொழில் இல்லாமலாக்கப்பட்டிருக்கின்றது. இவர்கள் தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபட வேண்டுமானால் அரசாங்கம் யதார்த்தத்தை உணர்ந்து செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இடைக்கால கணக்கறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 2019ஆம் ஆண்டு இறுதியில் பொருளாதார வளர்ச்சி வேகம் 2.3 சதவீதமாக இருந்தது. ஆனால், இவ்வாண்டின் முதல் காலாண்டில் 1.6 சதவீதமாக குறைவடைந்துள்ளது. 

கடந்த ஆண்டு ஜுலை மாதமாகும் போது உயர்ந்த வருமானம் பெறும் நடுத்தர நாடாக எமது நாடு அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், இவ்வாண்டு ஜூலை மாதத்தில் குறைந்த வருமானம் பெறும் நடுத்தர நாடாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளோம்.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் பாரிய அளவில் கொவிட் வைரஸ் தாக்கம் இருக்கவில்லை. ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் நாம் கொரோனா பற்றி பேசியபோது பொறுப்புடைய அரச அதிகாரிகள் ஒரு சதத்திற்கேனும் எமது பேச்சை கணக்கெடுக்கவில்லை. 

ஆகவே, கடந்த ஆண்டு இறுதியில் 2.3 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி வேகம் கொரோனா பாதிப்பு இல்லாத சூழலில் எவ்வாறு 1.6 சதவீதமாக வீழ்ச்சிகண்டது. இது யாருடைய பொறுப்பு? யார் பொறுப்பேற்பது?

மேலும் உலக வங்கி 3.6 சதவீத பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கி 6.1 சதவீதம் எனக் கூறுகிறது. ஆனால், அரச தரப்பு பொருளாதார நிபுணர்கள் 1.6 சதவீத பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக தெரிவிக்கின்றனர். அதனால் இவர்களின் நிபுணத்தும் பற்றி எதை சொல்வதென தெரியவில்லை.

எனவே இன, மத பேதங்கள் கடந்து இந்த பாரிய பொருளாதார நெருக்கடிக்கு நாம் ஒரு நாடாக முகங்கொடுக்க வேண்டும். அவ்வாறு முகங்கொடுக்க வேண்டுமென்றால் நாம் உண்மை மற்றும் யதார்த்தத்தை பற்றி நன்கு புரிந்துக்கொள்ள வேண்டும். 

உண்மையான யதார்த்தம் என்னவென்றால் கொவிட் தாக்கம் காரணமாக 4 இலட்சம் பேர் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர். வசதி குறைந்த குடும்பங்களில் ஒரு இலட்சம் பேருக்கும் ஐம்பதாயிரம் பட்டதாரிகளுக்கும் வேலை வாய்ப்புகளை வழங்குவது மிகவும் நன்மையானது. ஒன்றரை இலட்சம் பேருக்கு தொழில் வழங்கும் போது மறுபுறம் 4 இலட்சம் பேருக்கு தொழில் இல்லாது போயுள்ளது. 

அதற்கு அப்பால் பலர் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மக்களுக்கான செய்யப்பட்ட பல அபிவிருத்தித்திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன இவை தொடர்பாகவும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment