மேல் மாகாணத்தில் 25 பாதாள உலக குழுக்களும், 388 உறுப்பினர்களும் அடையாளம் - தகவல் தெரிந்தால் 1997, 1917 இலக்கங்களுக்கு அழைக்கவும் - News View

Breaking

Post Top Ad

Sunday, August 30, 2020

மேல் மாகாணத்தில் 25 பாதாள உலக குழுக்களும், 388 உறுப்பினர்களும் அடையாளம் - தகவல் தெரிந்தால் 1997, 1917 இலக்கங்களுக்கு அழைக்கவும்

(எம்.எப்.எம்.பஸீர்)

மேல் மாகாணத்தை தளமாக கொண்டு இயங்கும் 25 பாதாள உலக குழுக்கள் தொடர்பில் அனைத்து தகவல்களையும் பொலிஸார் திரட்டிக்கொண்டுள்ளனர். அதன்படி திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடும் இந்த 25 குழுக்களில் 388 உறுப்பினர்கள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.

இந்த 25 குழுக்களில் 20 குழுக்கள் தற்போதும் மிகத் தீவிரமாக இயங்கும் நிலையில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும் இதுவரை பொலிஸார் முன்னெடுத்துள்ள விசாரணைகளில் அடையாளம் காணப்பட்டுள்ள 388 பாதாள உலக குழுக்களுடன் தொடர்புடைய உறுப்பினர்களில் 346 பேரே செயற்பாட்டு வட்டத்துக்குள் உள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்ட பாதாள உலக குழு உறுப்பினர்களில் 41 பேருக்கு எதிராக, அவர்களைக் கைது செய்வதற்கான சர்வதேச பிடியாணையான சிவப்பு அரிவித்தல்களைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

இதில் 16 பேர் தொடர்பில் எந்த தகவலும் இல்லை என தெரிவிக்கும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், 25 பேர் வெளிநாடுகளில் உள்ளதாக தெரிவித்தார். எவ்வாறாயினும் தற்போதும் இந்த 41 பேரில் 19 பேருக்கு எதிராக நீதிமன்றங்களில் திறந்த பிடியாணைகளைப் பெற்று அதனூடாக சிவப்பு அறிவித்தல்கலைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த விடயங்களை கொழும்பு குற்றப் பதிவுப் பிரிவில் இடம்பெற்ற மேல் மாகாணத்தின் உயர் பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு குற்றத் தடுப்பு தொடர்பில் நடாத்தப்பட்ட ஒரு நாள் செயலமர்வில் கலந்துகொண்டு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் வெளிப்படுத்தினார்.

இதன்போது அவர் தகவல்களை வெளிப்படுத்துகையில், 'மேல் மாகாணத்தில் 25 குற்றக் குழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் 20 குழுக்கள் மிக தீவிரமாக இயங்கு நிலையில் உள்ளன. இந்த குழுக்களை சேர்ந்த 388 உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதில் 366 பேர் இயங்கு நிலையில் உள்ளனர்.

அடையாளம் காணப்பட்ட 388 பாதாள உலக உறுப்பினர்களில் தற்போது 6 பேர் சிறைவாசம் அனுபவிக்கின்றனர். மேலும் 130 பேர் விளக்கமறியலில் உள்ளனர். சிறைவாசம் அனுபவிக்கும், விளக்கமரியலில் உள்ள 136 பேரும், சிறைக்குள் இருந்தவாறு குற்றச் செயல்களை நெறிப்படுத்துவது குற்றச் செயல்கலைக் கட்டுப்படுத்த பொலிஸாருக்கு பெரும் சவாலாக உள்ளது. தொலைபேசிகள் ஊடாகவும், வேறு தகவலாளிகள் ஊடாகவும் அவர்கள் இக்குற்றங்களை நெறிப்படுத்துகின்றனர். 

இதேவேளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பிணையில் உள்ள 123 பாதாள உலக குழுக்கள், திட்டமிட்ட குற்றங்களுடன் தொடர்புடையோரும் இக்குற்றங்களை மறைமுகமாக முன்னெடுக்கின்றனர். நாம் அண்மையில் செய்த சுற்றிவளைப்புக்கள் ஊடாக அவை தெரியவந்துள்ளன. வழக்கு தினங்களில் நீதிமன்றங்களில் ஆஜராகும் அவர்கள், நல்லவர்களாக வேடம் இட்டு, கப்பம் மற்றும் போதைப் பொருள் கடத்தல்களில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில் திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடும் அடையாளம் காணப்பட்டவர்களில் 16 பேர் தொடர்பில் தற்போது எந்த தகவலும் இல்லை. 25 பேர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் எதிராக சிவப்பு, நீல அறிவித்தல்களைப் பெற்று நடவடிக்கை எடுக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போதும் இதில் 19 பேருக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் பெறப்பட்டுள்ளது. என சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.

இதன்போது குறித்த செயலமர்வில் கலந்துகொண்ட சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அரச சட்டவாதி ஜனக பண்டார, பொலிஸார் கைது செய்யும் இத்தகைய திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் தொடர்பில் குறுகிய காலத்தில் விசாரணைக் கோவையை சட்ட மா அதிபருக்கு கையளித்தால், 3 மாதங்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க சட்ட மா அதிபர் திணைக்களம் தயாராக இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் போதைப் பொருள், பாதாள உலக நடவடிக்கை ஒழிப்பு தொடர்பில் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் விஷேட நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஜூன் 6 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த விஷேட நடவடிக்கைகளில், மூன்று மாதங்களுக்குள் பாரிய முன்னேற்றம் அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது. 

இ ந்நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க, பொதுமக்களின் தகவல்கலைப் பெற்றுக்கொள்வதை பிரதான நோக்காக கொண்டு 1997, 1917 ஆகிய துரித தொலைபேசி அழைப்புச் சேவைகள் வழங்கப்பட்ட நிலையில் அதனூடாகவும் பல்வேரு தகவல்கள் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

கப்பம் பெறல், போதைப் பொருள் கடத்தல், பாரிய ஊழல் மற்றும் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல், பொது மக்கள் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் தகவல்கள், போன்ற விஷேட காரணிகளை தெரிவிக்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 1997 என்ற துரித தொலைபேசி இலக்கம் பொலிஸ் உளவுப் பிரிவான பொலிஸ் விஷேட நடவடிக்கை பிரிவில் மிக இரகசியமாக இயங்கும் குழுவொன்றினால் கையாளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், போதைப் பொருள் கடத்தலால் திரட்டப்படும் சொத்துக்கள் உள்ளிட்ட கறுப்பு பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் விசாரணை செய்ய முடியுமான சொத்து குவிப்புக்கள் தொடர்பிலான விடயங்கள் குறித்து 1917 என்ற துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அறிவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழுள்ள சிறப்பு பிரிவினரால் கையாளப்பட்டு வருகின்றது.

இவ்விரு துரித அழைப்பு இலக்கங்களும் பாதாள உலகம், போதைப் பொருள் கடத்தலை ஒழிக்கும் நோக்கில் விஷேடமாக பயன்படுத்தப்படுவதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

அதன்படி கடந்த 3 மாத காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளில் 23 கிலோ 395 கிராம் 478 மில்லி கிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் 17 ஆயிரத்து 361 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

863 கிலோ 228 கிராம் 025 மில்லி கிராம் கஞ்சாவுடன் 12 ஆயிரத்து 47 சந்தேக நபர்களும், ஒரு கிலோ 855 கிராம் 259 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் 829 சந்தேக நபர்களும் நாடளாவிய ரீதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இக்காலப்பகுதியில் பல்வேறு ரகங்களைச் சேர்ந்த 298 துப்பாக்கிகளை பொலிஸார் மீட்டுள்ளனர். அதில் ரீ 56 ரக துப்பாக்கிகள் 14, ரீ 81 ரக துப்பாக்கி ஒன்று, கைத்துப்பாக்கிகள் 10, ரிவோல்வர்கள் 4, 12 குழல் துப்பாக்கிகள் 49, ' கல்கடஸ் ' என பரவலாக அறியப்படும் மிருக வேட்டைக்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் 37, உள் நாட்டுத் தயாரிப்பு துப்பாக்கிகள் 183 ம் உள்ளடங்குகின்றன. 

இதனைவிட 2013 தோட்டாக்கள், 21 வாள்கள், 11 கூரிய கத்திகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் துப்பாக்கிகள், வாள், கத்திகள் மற்றும் தோட்டாக்களுடன் 321 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இக்காலப்பகுதியில் 570 கிராம் வெடி பொருட்களும் 28 டெட்டனேட்டர்களும் 45 கைக்குண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவை தொடர்பில் 38 சந்தேக நபர்கள் சிக்கியுள்ளனர்.

அதேவேளை, இந்த 3 மாதங்களுக்குள் 5 இலட்சத்து 98 ஆயிரத்து 578 லீட்டர் சட்ட விரோத மதுபனம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 811 ஆகும். நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 26 ஆயிரத்து 121 பேரும் இக்காப்பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad