இந்தியாவிலிருந்து 2,262 கிலோகிராம் மஞ்சள் கடத்திய 7 பேர் கைது - தொலைபேசிகள், சிம் அட்டைகள், பணமும் கைப்பற்றல் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 30, 2020

இந்தியாவிலிருந்து 2,262 கிலோகிராம் மஞ்சள் கடத்திய 7 பேர் கைது - தொலைபேசிகள், சிம் அட்டைகள், பணமும் கைப்பற்றல்

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் 1,400 கிலோகிராம் மற்றும் 862 கிலோகிராம் மஞ்சளுடன் முறையே கற்பிட்டியில் 6 பேரும், பேசாலை, துள்ளுக்குட்டிகுடியிருப்பில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலிருந்து அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக படகு மூலம் கொண்டு வரப்பட்ட சுமார் 1,400 கிலோகிராம் மஞ்சளை, கற்பிட்டி கடற்படையினர் கைப்பற்றியுள்ளதுடன், இதில் சந்தேகநபர்கள் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (29) மாலை கற்பிட்டி விஜய கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கமைய, கற்பிட்டி துரையடி பகுதியில் டிங்கி படகு ஒன்றை சோதனை செய்தவேளை, இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக மஞ்சளைக் கொண்டுவந்து லொறி ஒன்றிலும் வெகனார் சொகுசு கார் ஒன்றிலும் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையின்போது தெரியவந்துள்ளது. இதன்போது 02 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் நுரைச்சோலை கடற்படையினருக்கு தகவல் வழங்கியமையையடுத்து, மஞ்சள் பொதிகளை கற்பிட்டியிலிருந்து கேகாலைக்கு கொண்டு சென்ற லொறி மற்றும் வெகனார் சொகுசு காரையும் நுரைச்சோலையில் வைத்து சோதனை செய்துள்ளனர். இதன்போது ஒருதொகை மஞ்சள் பொதிகளுடன் 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டபோது, வெள்ளதீவு மற்றும் இப்பந்தீவு பகுதிகளில் ஒரு தொகை மஞ்சள் பொதிகளை மறைத்து வைத்துள்ளமை தெரியவந்துள்ளது. இதையடுத்து கற்பிட்டி விஜய கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒருதொகை மஞ்சள் பொதிகள் கைப்பற்றுள்ளதாக, கற்பிட்டி விஜய கடற்படையினர் தெரிவித்தனர். 

இச்சந்தேகநபர்களிடமிருந்து மொத்தமாக சுமார் 1,400 கிலோகிராம் மஞ்சள், டிங்கி படகு ஒன்றும், கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட வெகனார் சொகுசு கார் ஒன்றும், லொறி ஒன்றும் 03 தொலைபேசிகள், 04 சிம் அட்டைகள், 26,550 ரூபா பணமும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

கைப்பற்றப்பட்ட மஞ்சளின் பெறுமதி சுமார் 43 இலட்சத்து 19 ஆயிரம் ரூபா என, கடற்படையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் நால்வர் கற்பிட்டியைச் சேர்ந்தவர்கள் எனவும், இருவர் கேகாலையைச் சேர்ந்தவர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 06 பேரும், கைப்பற்றப்பட்ட பொருட்களுடன், மேலதிக விசாரணைகளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 
இதேவேளை, இந்தியாவிலிருந்து கடல் வழியாக கொண்டு வரப்பட்ட 862 கிலோ 370 கிராம் மஞ்சளுடன் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  இக்கைது நேற்று (29) மாலை இடம்பெற்றுள்ளது. 

மன்னார் - தலைமன்னார் வீதியில் துள்ளுக்குட்டிக்குடியிருப்பு பிரதேசத்தில், இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

பேசாலை பொலிஸ் நிலைய அதிகாரிகளினால், தலைமன்னாரிலிருந்து பேசாலை நோக்கி புறப்பட்ட சிறிய லொறி சோதனையிடப்பட்டது. இதன்போது மஞ்சளுடன் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

புத்தளத்தைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

இச்சந்தேகநபரை இன்று (30) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் எடுத்துள்ளனர். சந்தேகநபரிடம் பேசாலை பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

(வனாத்தவில்லு நிருபர் - கே. பிரியங்கர கலுபஹன)

No comments:

Post a Comment