ஜீவனின் தலைமைத்துவ அணுகுமுறையானது மக்களுக்காக அவர் போராடுவார் என்ற நம்பிக்கையை அளிக்கிறது - பிரதமர் மஹிந்த - News View

About Us

About Us

Breaking

Sunday, July 26, 2020

ஜீவனின் தலைமைத்துவ அணுகுமுறையானது மக்களுக்காக அவர் போராடுவார் என்ற நம்பிக்கையை அளிக்கிறது - பிரதமர் மஹிந்த

வேலைவாய்ப்புகளை இலகுபடுத்தும் ...
பெருந்தோட்ட மக்களுக்கு தலைமைத்துவத்தை வழங்கிய ஆறுமுகன் தொண்டமானின் மறைவு எமக்கு பேரிழப்புதான். ஆனாலும் அவரின் புதல்வரான ஜீவன் தொண்டமானின் தலைமைத்துவ அணுகுமுறையானது, மக்களுக்காக அவர் போராடுவார் என்ற நம்பிக்கையை எமக்கு அளிக்கின்றது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தலைமையில் ஹட்டன் டி.கே.டபிள்யூ மண்டபத்தில் இன்று (26) நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது "அமரர் ஆறுமுகன் தொண்டமான் இறுதியாக என்னை சந்தித்தபோது கூட பெருந்தொட்ட மக்கள் தொடர்பிலேயே அதிகம் கலந்துரையாடினார். பெருந்தொட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு, வீட்டுத்திட்டம் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக கதைத்தார். பிரச்சினைகளுக்கான தீர்வு திட்டங்களையும் முன்மொழிந்திருந்தார்.

தாத்தா (சௌமியமூர்த்தி தொண்டமான்) அதன் பின்னர் பேரன் (ஆறுமுகன் தொண்டமான்) இன்னும் அவரின் மகன் (ஜீவன் தொண்டமான்) ஆகிய மூவருடனும் வேலை செய்வதற்கான அதிஷ்டம் எனக்கு கிட்டியுள்ளது. இதன்படி மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்காக மூவரும் கையாளும் அணுகுமுறைகள் தொடர்பில் எனக்கு தெரியும்.

பாட்டன், தந்தை ஆகிய இருவர் கையாண்ட அணுகுமுறைகளைக் காட்டிலும் ஜீவன் தொண்டமான் மிகவும் வித்தியாசமான முறையில் அணுகி வருகின்றார். பெருந்தோட்ட உரிமையாளர்களுடன் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தினோம். இதில் ஜீவன் தொண்டமானும் பங்கேற்றிருந்தார். இக்கூட்டத்தின்போது அவர் மிகவும் தர்க்கரீதியாக வாதங்களை முன்வைத்தார். மறுக்க முடியாத வகையிலேயே கருத்துகளை முன்வைத்தார்.

பொதுத் தேர்தல் முடிவடைந்ததும் நாம் மீண்டும் சந்தித்து இப்பிரச்சினை தொடர்பில் நிரந்தரமானதொரு தீர்வு எட்டப்படும் என்பதையும் கூறிக் கொள்கின்றேன். ஆறுமுகன் தொண்டமானின் கோரிக்கையின் பிரகாரமே எமது ஆட்சியின் போது மலையகத்தில் பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக லயன் யுகத்துக்கு முடிவு கட்டுவதற்கு தொண்டமானே அடித்தளமிட்டார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கௌரவமாகவே, கொரோனா பிரச்சினைக்கு மத்தியிலும் அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அரச மரியாதையுடன் இறுதி நிகழ்வுகளை நடத்தினோம். எனவே, பெருந்தோட்ட மக்களை நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம்." - என்றார்.

மலையக நிருபர் கிரிஷாந்தன்

No comments:

Post a Comment