ஆற்றல் மிகுந்த தலைவர்களை இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யுங்கள் - பிரதமர் மஹிந்த - News View

Breaking

Post Top Ad

Sunday, July 26, 2020

ஆற்றல் மிகுந்த தலைவர்களை இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யுங்கள் - பிரதமர் மஹிந்த

ஆற்றல் மிகுந்த தலைவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புங்கள்
பொறுப்பொன்றை ஒப்படைக்கக் கூடிய ஆற்றல் மிகுந்த தலைவர்களை இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பயமின்றி பொறுப்பை ஒப்படைக்கக் கூடிய ஆற்றல் மிகுந்த உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்து அனுப்புவது பொதுமக்களின் கடமை என்று நுவரெலியா ராகல பிரதேசத்தில் இன்று (26) முற்பகல் நடைபெற்ற சந்திப்பொன்றில் கலந்துகொண்ட பிரதமர் இதன்போது இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் கைவிடப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னோக்கி கொண்டு சென்று வேலையற்று காணப்படும் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவது விரைவில் நிறைவேற்ற வேண்டியது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் பொறுப்பாக கருதப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளிட்ட வளங்களை விற்பனை செய்தமை தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதமர், ஐந்து வருடங்களுக்கு நியமிக்கப்படும் அரசாங்கத்திற்கு எதிர்கால சந்ததியினருக்காக உள்ள நாட்டின் வளங்களை விற்பனை செய்யமுடியாது என்பதை ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கங்களும் கவனத்திற் கொண்டு செயற்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

முறையான கொள்கை அற்றவர்கள் ஆட்சிக்கு வருவதனால் நாட்டிற்கு ஏற்படும் இவ்வாறான சேதங்களை தவிர்ப்பதற்கு கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது 69 இலட்சம் மக்கள் ஒன்றிணைந்து ஏற்றுக்கொண்ட சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு இம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு அதிகாரத்தை பெற்றுக் கொடுக்குமாறு இதன்போது பிரதமர் மேலும் கேட்டுக் கொண்டார்.

குறித்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர் சீ.பீ.ரத்னாயக்க உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

குறித்த சந்திப்பில் கலந்துக் கொள்வதற்கு முன்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீ சாரிபுத்தாராம ரேவன பிரிவெனாவிற்கு சென்று அங்கு பிரிவெனாதிபதி பிடிகல வஜிர தேரரிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டதுடன், பின்னர் ராகல ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்திற்கு சென்று ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.

வவுனியா தீபன்

No comments:

Post a Comment

Post Bottom Ad