தொழிற்சங்கப் போராட்டத்தை கைவிட்டனர் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, July 29, 2020

தொழிற்சங்கப் போராட்டத்தை கைவிட்டனர் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

Decision on ongoing PHI trade union action tomorrow
தாம் முன்னெடுத்து வந்த தொழிற்சங்க போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளதாக, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் சுகாதாரப் பிரிவு அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, இன்று (29) முற்பகல் 7.30 மணி முதல் மீண்டும் பணியில் இணையப் போவதாக, அச்சங்கம் அறிவித்தது.

கொரோனா ஒழிப்பு பணி மற்றும் தொற்று நோய் கட்டுப்பாடு தொடர்பான பணிகளிலிருந்து, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கடந்த ஜூலை 17ஆம் திகதியிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்து வந்திருந்தனர்.

கொவிட்-19 கட்டுப்படுத்தல் தொடர்பான, தேர்தல் வழிகாட்டல் வர்த்தமானியில் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு உரிய அதிகாரம் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படுவதை தடுக்கும் வகையில், பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு அதிகாரத்தை வழங்குவதில்லை என, சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி கருத்து வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் அச்சங்கம் கண்டனத்தை வெளியிட்டிருந்ததோடு, அதனையும் தமது தொழிற்சங்க நடவடிக்கைக்கான காரணமாகத் தெரிவித்திருந்தது.

இதுவரை காலமும் குறைந்த வசதிகள் மற்றும் சட்ட பாதுகாப்பு இன்றிய நிலையில், உயிர் ஆபத்தையும் பொருட்படுத்தாது, சில தொழிற்சங்கங்களின் மனதளவிலான கொடுமைகளை தாங்கிக்கொண்டு, மேற்கொள்ளப்பட்டு வந்த, இலங்கை மக்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பது தொடர்பான செயற்பாடுகள், பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் விடயம் என, மக்களுக்கு தெரிவிக்க முனைந்த முயற்சி தொடர்பில் தமது உறுப்பினர்கள் அனைவரும் மனமுடைந்துள்ளதாக, அச்சங்கம் தெரிவித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து, எவ்வித தீர்வும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து கடந்த வெள்ளிக்கிழமை (24) சுகவீன விடுமுறை தொழிற்சங்கப்  போராட்டத்திலும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பொதுச் சுகாதார ஊழியர்களின் அதிகாரம் தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபம், சட்டத்திற்கு முரணானது என, சட்ட மா அதிபர் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad